சென்னை டெஸ்ட் போட்டியில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்துக்கு மேலும் 3 விக்கெட்டுகள் பறிபோனது. இதையடுத்து அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அணி 482 ரன்கள் என்ற மிகக் கடினமான இலக்குடன் நேற்று பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே அஷ்வின் மற்றும் அக்சர் படேலின் சுழற் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். சிப்லி 3 ரன்களிலும், பர்ன்ஸ் 25 ரன்களிலும், நைட் வாட்ச்மேன் லீச் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து நேற்று இங்கிலாந்து 50 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 எடுத்திருந்தது. லாரன்சும், ஜோ ரூட்டும் களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில், வெற்றி பெற 429 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இன்று இங்கிலாந்து மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கியது.ஆனால் இன்று காலையிலேயே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டேன் லாரன்ஸ் 26 ரன்களில் அஷ்வினின் பந்தில் ஆட்டம் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் ஜோ ரூட்டுடன் இணைந்தார். அவரும் நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. அவர் 8 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வினின் பந்தில் ஆட்டம் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்சை அஷ்வின் 10-வது முறையாக ஆட்டமிழக்கச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 90 ரன்களில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின்னர் ஒல்லி போப் களமிறங்கினார். அவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். 12 ரன்கள் எடுத்திருந்த போது அக்சர் படேலின் பந்தில் ஒல்லி போப் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து 110 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின்னர் 7வது விக்கெட்டுக்கு பென் போக்ஸ் களமிறங்கினார். அஷ்வின் 2வது இன்னிங்சில் இதுவரை 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் இன்னிங்சில் ஏற்கனவே அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.