இந்தியாவுக்கும், வெற்றிக்கும் இடையே இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. இங்கிலாந்து இன்று உணவு இடைவேளையின் போது 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.சென்னையில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 482 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் நேற்று பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்துக்கு 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோனது.
இந்நிலையில் 3 விக்கெட்டுகளுக்கு 53 ரன்கள் என்ற நிலையில் இங்கிலாந்து இன்று மீண்டும் ஆட்டத்தை தொடங்கியது. ஆனால் இன்றும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். இன்று லாரன்ஸ் 26 ரன்களில் அஷ்வினின் பந்திலும், பென் ஸ்டோக்ஸ் அதே அஷ்வினின் பந்தில் 8 ரன்களிலும், ஒல்லி போப் 12 ரன்களில் அக்சர் படேலின் பந்திலும், பென் போக்ஸ் 2 ரன்களில் குல்தீப் யாதவின் பந்திலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இங்கிலாந்துக்கு வெற்றி பெற இன்னும் 366 ரன்கள் எடுக்க வேண்டும். இங்கிலாந்துக்கு கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. இந்திய தரப்பில் அக்சர் படேல், அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.