நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசனுக்கு ₹ 15 கோடி பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது

by Nishanth, Feb 18, 2021, 20:59 PM IST

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசனை பெங்களூரு அணி ₹ 15 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த சீசனில் கிறிஸ் மோரிசுக்கு அடுத்தபடியாக இவர் தான் 2வது மதிப்புமிக்க வீரர் ஆவார்.ஐபிஎல் 14வது சீசனுக்கான மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக தொகையான ₹ 16.25 கோடிக்கு தென் ஆப்பிரிக்க வீரர் கிரிஸ் மோரிசை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் இதுவரை அதிக தொகைக்கு விலை போனவர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனை முறியடிக்கப்பட்டது.

2015ல் யுவராஜ் சிங்கை டெல்லி அணி ₹ 16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது தான் இதுவரை உள்ள சாதனையாக இருந்தது. இந்நிலையில் இன்றைய ஏலத்தில் 2வது பெரிய தொகையான ₹ 15 கோடிக்கு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசனை பெங்களூரு அணி சொந்தமாக்கி உள்ளது.₹ 14.25 கோடிக்கு இதே பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் 3வது இடத்திலும் ₹ 14 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஜை ரிச்சர்ட்சன் 4வது இடத்திலும் உள்ளனர்.

₹ 9.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்த கிருஷ்ணப்பா கவுதம் தான் இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை தேசிய அணியில் இடம்பெறாத வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ₹ 20 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிலீ மெரிடித்தை ₹ 8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. மோயின் அலியை ₹ 7 கோடிக்கு சென்னையும், டாம் கரனை ₹ 5.25 கோடிக்கு டெல்லியும், நதான் கூல்டர்நீலினை ₹ 5 கோடிக்கு மும்பை அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது. ₹ 20 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஷாருக்கானை ₹ 5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சிவம் துபேவை ₹ 4.4 கோடிக்கு ராஜஸ்தான் அணியும், கேரள வீரர்களான சச்சின் பேபி மற்றும் முகம்மது அசாருதீன் ஆகியோரை அடிப்படை விலையான ₹ 20 லட்சத்திற்கு பெங்களூரு அணியும், விஷ்ணு வினோதை அதே தொகைக்கு டெல்லி அணியும், எடுத்துள்ளது. எஸ்.மிதுனை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படை விலையான ₹ 20 லட்சத்திற்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஹர்பஜன் சிங்கை ₹ 2 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. சாம் பில்லிங்சை ₹ 2 கோடிக்கு டெல்லி அணியும், கேதார் ஜாதவை ₹ 2 கோடிக்கு ஹைதராபாத் அணியும், முஜிபுர் ரஹ்மானை ₹ 1.50 கோடிக்கு ஹைதராபாத் அணியும் வாங்கியுள்ளது.

You'r reading நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசனுக்கு ₹ 15 கோடி பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை