இந்தியா, இங்கிலாந்து பிங்க் பால் டெஸ்ட் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது

by Nishanth, Feb 24, 2021, 09:09 AM IST

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. புதிய பிட்ச் என்பதால் காலையில் பிட்சைப் பரிசோதித்த பின்னரே வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இரு அணி கேப்டன்களும் கூறியுள்ளனர்.இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மொத்தமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்திலும், அடுத்த போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இதனால் தற்போது டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டி குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மொட்டேரா சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இங்கு 1,10,000 பேர் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம். தற்போது கொரோனா காலம் என்பதால் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே கிரிக்கெட் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் 55 ஆயிரம் ரசிகர்கள் போட்டியைப் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக போட்டி நடைபெற உள்ளது. புதிய பிட்ச் என்பதால் இன்று காலையில் பிட்சை பரிசோதித்த பின்னரே வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இரு அணி கேப்டன்களும் கூறியுள்ளனர்.மேலும் இன்றைய போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்குகிறது. இதுவரை இந்தியா இரண்டு பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளது. இந்தியா 1 போட்டியில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இங்கிலாந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை சர்வதேச அளவில் 15 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இதில் 8 கிரிக்கெட் போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இதற்கு முன் நடந்த ஒரு பிங்க் பால் டெஸ்ட் போட்டியைக் கெட்ட கனவாக நினைத்து மறக்கவே விரும்புகிறது. கடந்த டிசம்பரில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியா 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததை ரசிகர்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 நவம்பரில் கொல்கத்தாவில் நடந்த முதல் பிங்க் பால் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அன்றைய டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாகப் பந்து வீசினர். இஷாந்த் சர்மாவும், உமேஷ் யாதவும் சேர்ந்து வங்க தேசத்தின் 17 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்நிலையில் இன்றைய டெஸ்ட் போட்டி வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமையுமா, அல்லது சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமையுமா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இன்றைய போட்டியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்படுவார் என கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் இருவரும் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading இந்தியா, இங்கிலாந்து பிங்க் பால் டெஸ்ட் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை