அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. போப் 1 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. சென்னையில் நடந்த இந்த டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலோ அல்லது 3-1 என்ற கணக்கிலோ வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாட முடியும். அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றில் வெற்றி பெற்று இன்னொரு போட்டியில் டிரா செய்தாலே போதுமானதாகும். ஆனால் இங்கிலாந்து இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும்.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள புதிய மொட்டேரா சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சிப்லியும், கிராலேயும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிப்லி ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்த் ஷர்மாவின் பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் பின்னர் களமிறங்கிய பேர்ஸ்டோ வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். அவரும் ரன் ஏதும் எடுக்காமல் அக்சர் படேலின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதன் பின்னர் கிராலேயுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் மெதுவாக இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் கேப்டன் ஜோ ரூட் 17 ரன்களில் அஷ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு 4வது விக்கெட்டுக்கு கிராலேயுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். மிகச் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கிராலே 53 ரன்களில் அக்சர் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு ஸ்டோக்சுடன் போப் ஜோடி சேர்ந்தார். தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும், போப் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.