கோஹ்லி புதிய சாதனை இந்தியாவில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் தோனியை முந்தினார்

by Nishanth, Feb 26, 2021, 12:54 PM IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத்தில் இந்த போட்டி நடந்த மொட்டேரா சர்தார் படேல் ஸ்டேடியம் (தற்போது இது பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது) உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாகும்.

இங்கு 1,10,000 பேர் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம். பிரம்மாண்டமான பல வசதிகள் இந்த ஸ்டேடியத்தில் உள்ளன. இந்த ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 3வது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள்ளேயே முடிந்து ஒரு சாதனையைப் படைத்துள்ளது. 1900ம் ஆண்டுக்கு பின்னர் இது 2வது நாளிலேயே முடிவடையும் 13வது டெஸ்ட் போட்டியாகும். இந்தியாவுக்கு இது 2வது போட்டியாகும். 2018ல் பெங்களூருவில் ஆப்கானிஸ்தான் அணியை இரண்டே நாளில் இந்தியா தோற்கடித்தது. இந்தப் போட்டியில் 4 இன்னிங்சுகளிலும் சேர்த்து மொத்தம் 842 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன.

இந்த வரிசையில் இது 7வது போட்டி ஆகும். கடந்த 1932ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 656 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன. இது தான் இதுவரை சாதனையாக இருக்கிறது.இந்த இன்னிங்சில் மொத்தம் 30 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதில் 28 விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சாளர்களுக்குத் தான் கிடைத்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் நேற்று டெஸ்ட் போட்டியில் 400வது விக்கெட்டை கடந்தார். இதன் மூலம் 400 விக்கெட்டுகளை கடக்கும் 4வது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. 619 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே முதலிடத்திலும், 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள கபில்தேவ் 2வது இடத்திலும், 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங் 3வது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய வெற்றியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும் ஒரு சாதனை படைத்துள்ளார். அவர் இந்திய மண்ணில் நேற்றைய போட்டியின் மூலம் 22வது வெற்றியை பெற்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். 29 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து இந்த வெற்றி கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. தோனி 30 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து இந்தியாவில் 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆக 35 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து கோஹ்லி வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் இந்தியாவில் இதற்கு முன்பு வேறு எந்த கேப்டனும் இந்த அளவுக்கு வெற்றி பெற்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading கோஹ்லி புதிய சாதனை இந்தியாவில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் தோனியை முந்தினார் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை