ஐ.பி.எல் தொடரின் 20வது லீக் போட்டியில், சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்திவி ஷா, அதிரடியாக விளையாட, மறுமுனையில் ஷிகர் தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், தவான் வெளியேற, சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த பிரித்திவி ஷாவும் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளிக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு159 ரன்கள் எடுத்தது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் டேவிட் வார்னர் ஒற்றை இலக்கில் வெளியேற, ஜானி பேர்ஸ்டோவும், கேன் வில்லியம்சன்னும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். பேர்ஸ்டோ 38 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், வில்லியம்சன் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறியதால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஐதராபாத் அணி 15 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் முதல் ஆடிய ஐதராபாத் அணி அக்சர் பட்டேலின் சிறப்பான பந்து வீச்சால் 7 ரன்களை மட்டுமே எடுத்தது. 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என சூப்பர் ஓவரில் களம் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக பிரித்திவி ஷா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.