’ஒரு ஜூனியராக இந்திய அணியில் நுழையும் முதல் நாள் இருக்கே...’ என விவரிக்கும் போதே பெருமூச்சு எடுத்து சிரிக்கிறார் கேப்டன் விராட்.
இன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அதிரடியும் மூர்க்கத்தனமான ஆட்டமும் கொண்டவன் என்ற ஆரம்ப கால விமர்சனங்களை எல்லாம் ஊதித் தள்ளிவிட்டு தனது அதிரடி ஆட்டம் மூலம் ‘ரன் மெஷின்’ ஆக உருவெடுத்தார்.
இன்று அதே வேகத்தில் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார் விராட் கோலி. எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் கேலி, கிண்டல் விமர்சனங்கள் வந்தாலும் தன் ஆட்டத்தில் நிலைய குலையாத விராட், இன்று இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் சர்ரே அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்று சர்வதேச கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
ஆனால், தன்னுடைய முதல் நாள் அனுபவம் குறித்து முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார் விராட். அவர் கூறுகையில், “ஒரு நாள் அம்மாவுடன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது விராட் கோலி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. என்னால் நம்ப முடியாமல் வதந்தி என்றே நினைத்தேன். ஆனால், அதன் பின்னர் அதிகாரப்பூர்வமான தகவல் எனக்கு நேரடியாகக் கிடைத்தது.
அணியில் முதல் நாளை என்னால் மறக்கவே முடியாது. அதுவரையில் கடவுளாக நான் மதித்த அனைவரும் எனக்கு சமமாக அமர்ந்து இருந்தனர். இந்திய அணியில் முதல் நாள் நுழையும் ஜூனியர்கள் செய்ய வேண்டிய ஒரு வழக்கம் உள்ளது. அது, சீனியர்கள் முன்னிலையில் நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அத்தனை ஜாம்பவான்கள் முன்னிலையிலும் பேச முடியாமல் நான் தவித்தேன். இன்று என் ஜூனியர்கள் பேசத் தடுமாறும் போது என்னை நினைத்து சிரித்துக் கொள்வேன்” என வேடிக்கையாகத் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.