ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலாவது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. மழை குறுக்கிட்டதின் காரணமாக 17 ஓவராக போட்டி குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 4 சிக்ஸர் விளாசி 46 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்திருந்தாலும் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இந்த இலக்கை இந்திய அணி சேஸ் செய்ய முயன்றது. தொடக்க ஆட்டக்காரரான இந்தியாவின் ஹிட்மேன் ரோகித் சர்மா வெறும் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய லோகேஷ் ராகுல் 13 ரன்களுக்கும் கேப்டன் விராத் கோலி 4 ரன்களிலும் விக்கெட்டை இழந்து இந்திய அணிக்கு அதிர்ச்சியை அளித்தனர். ரிஷப் பந்த் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
மறு முனையில் அதிரடியாக ஆடிய தவான் 42 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசி 76 ரன்கள் குவித்தார். இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பை ஏற்படுத்திய தவான் 76 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தார். வெறும் 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழக்க இந்திய அணி தோல்வியின் விளிம்பிற்கு சென்றது.
கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3வது பந்தில் க்ருணால் பாண்டியா ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் குல்தீப் யாதவ் 4 ரன்கள் அடித்தும் இந்திய அணிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதற்கு மழை பெரிய காரணமாக அமைந்தது. அடுத்த போட்டி நவம்பர் 23ம் தேதி மெல்போர்னிலும், கடைசி போட்டி 25ம் தேதி சிட்னியிலும் நடக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றால் தான் தொடரை கைப்பற்ற முடியும்.