பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரி ராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் திருநாவுக்கரசை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், பல்வேறு உண்மைகள் வெளியானதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசு அளித்த தகவலின்படி காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பு கடந்த வாரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆரம்பம் முதலே சர்ச்சைக்கிடமாக உள்ள அதிமுக பிரமுகர் பார் நாகராஜனுக்கும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கும் வரும் 28-ந்தேதி ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திமுக மாவட்டச் செயலாளர் மகனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.