தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு... பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு

Feb 14, 2018, 16:25 PM IST

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தாமிர உருக்காலையை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், அதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி வேகமாக நடந்துவருகிறது.

விரிவாக்கப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் அதன் மூலம் தங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், ஸ்டெர்லைட் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த விரிவாக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது மற்றும் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலை அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள், தூத்துக்குடியில் கடந்த 2 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், சீருடையுடன் போராட்டத்தில் அமர வைத்தனர். இந்நிலையில், நேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்ட 43 சிறுவர், சிறுமியர், 142 பெண்கள் உட்பட 257 பேர் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களைப் போராட்டம் செய்யத் தூண்டியது உட்பட 5 பிரிவுகளின் கீழ் பாத்திமா பாபு, மகேஷ், பிரபு, விமல், வேல்ராஜ், ஆல்பர்ட், சுர்ஜித், முருகன் மற்றும் துரைப்பாண்டியன் ஆகிய 8 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், வழக்கை விசாரித்த நீதிபதி 8 பேரையும் வரும் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி, தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் மக்கள், அதை விட்டு வெளியேறாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக மண்டபத்திலிருந்து வெளியேற்றினர்.

ஸ்டெர்லைட் விரிவாக்க விவகாரம் தூத்துக்குடி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு... பொதுமக்கள் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை