என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பொன். ராதாகிருஷ்ணன் தான் காரணம் : சுப. உதயகுமாரன்

அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குறித்த திறந்த கடிதம் எழுதி பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சுப. உதயகுமாரன் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து,  சுப. உதயகுமாரன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம். “வளர்ச்சி” என்கிற பெயரில் அழகுமிகு கன்னியாகுமரி மாவட்டத்தை உருக்குலைத்துக் கொண்டிருக்கும் மத்திய இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் (பொன்.ரா.) அவர்களின் மக்கள்-விரோத, சூழல்-விரோத, சனநாயக-விரோதப் போக்கு குறித்து உங்களிடம் முறையிடுவதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

குமரி மாவட்ட கடலோர, கரையோர, உட்பகுதி மக்களின் ஈடுபாடுகளுக்கு எதிராக இனையம் சரக்குப்பெட்டக மாற்று முனைய துறைமுகத் திட்டத்தை திரு. பொன்.ரா. திணிக்க முயன்றபோது, அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக எதிர்த்தனர். அதன் விளைவாக அந்தத் திட்டத்தை கமுக்கமாகக் கைகழுவிவிட்டு, அதை குமரிமுனைப் பகுதிக்கு மாற்றியிருக்கின்றனர்.

“குணம் நாடி, குற்றமும் நாடி” அலசி ஆராய்ந்து, இந்தத் திட்டம் ஏற்புடையது அல்ல என உணர்ந்த மீனவ மக்களும், விவசாய மக்களும் ஒன்றாய் நின்று சாதி, மத பேதமின்றி இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த போராட்டக் குழுவில் நான் இடம்பெறவில்லை. ஆனால் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்கிற முறையில், பசுமை அரசியலாளன் எனும் அடிப்படையில் இப்பகுதி மக்கள் நடத்தும் பல போராட்டங்களில் பங்கேற்று அவர்களை ஆதரித்துப் பேசி வருகிறேன்.

இந்த நிலையில் கன்னியாகுமரி சரக்குப்பெட்டக மாற்று முனைய துறைமுகத் திட்டத்தின் ஆதரவு பிரச்சாரப் பயணம் என்கிற பெயரில் அமைச்சரின் ஆதரவாளர்களும், மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நபர்களும் குமரி மாவட்டம் முழுவதும் எனது பெயரைக் குறிப்பிட்டு, எனக்கெதிராக ஒரு பெரும் அவதூறுப் பிரச்சாரத்தை நடத்தினார்கள். பின்னர் என்னையும் வேறு சில தோழர்களையும் தேசத்துரோக வழக்கு போட்டு கைதுசெய்யச் சொல்லி மொட்டை சுவரொட்டிகள் ஒட்டினார்கள்.

அமைச்சர் திரு. பொன்.ரா.வின் ஆதரவாளரும், குமரி மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவருமான திரு. முத்துராமன் என்பவர் கடந்த சனவரி மாதம் கடைசி வாரத்தில் என்னை கைப்பேசியில் அழைத்து “உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். “நான் சென்னையில் இருக்கிறேன், நான்கைந்து நாட்கள் கழித்துத்தான் ஊருக்கு வருவேன்” என்று பதில் சொன்னேன். ஊருக்கு வந்ததும் தன்னை அழைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டாலும், நான் அவரை அழைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 10, 2018 அன்று மத்திய அமலாக்கத் துறையின் (Enforcement Directorate) சென்னை அலுவலகத்திலிருந்து எனக்கு ஓர் அழைப்பாணை வந்திருக்கிறது. எனது பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்களர் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் (அனைத்தும் அசலாக இருக்க வேண்டுமாம்), இரண்டு புகைப்படங்கள், என்னுடைய வங்கிக் கணக்குகளின் கடந்த பத்தாண்டு கால வங்கி அறிக்கைகள், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் விபரம், கடந்த பத்தாண்டுகளில் நான் கட்டியிருக்கும் வருமான வரி விபரங்கள், கடந்த பத்தாண்டுகளின் தணிக்கை அறிக்கைகள், என் பெயரிலும், என் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலுமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் விபரங்கள் போன்றவற்றை கொண்டுவர வேண்டும் என்று பணித்திருக்கிறது அந்த அழைப்பாணை.

நிதித் துறையின் இணை அமைச்சராக இயங்கும் திரு. பொன்.ரா. இதன் பின்னணியில் இருக்கிறார் என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம். தனக்குப் பிடிக்காதவர்களை துன்புறுத்துவதற்காக வழங்கப்படுவதல்ல அமைச்சர் பதவி; மக்களுக்கு தொண்டு செய்வதற்காகக் கொடுக்கப்படுவது அது. ஆனால் அமைச்சர் பொன்.ரா. அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகச் செயல்களில் ஈடுபடுகிறார்.

திரு. பொன்.ரா. அவர்களின் பேச்சுக்களில் பொறுமை இல்லை, நிதானம் இல்லை, தரம் இல்லை. மாறாக, கோபம் கொப்பளிக்கும் முகத்துடன், வெறுப்பை, கடுமையை உமிழ்கிறார். “கன்னியாகுமரி சுடுகாடாகும்” என்றெல்லாம் தவறாகப் பேசுகிறார்.

பிப். 12 அன்று நாகர்கோவில் நிகழ்வு ஒன்றில் பேசிய திரு. பொன்.ரா. “கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் இன்று இடிந்தகரைக்குப் போனால் மக்கள் அவரை செருப்பால் அடிப்பார்கள்” என்று தரமற்ற, முதிர்ச்சியற்ற, அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசியிருக்கிறார்.

தன் தொகுதியில் ஓகிப் புயலால் இரண்டாயிரம் மீனவர்கள் காணாமல்போன நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிர்களையும், வீடுகளையும் இழந்த நிலையில், ஈரான் நாட்டுக்கு துறைமுகம் திறக்கச் சென்றார் இந்த நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர். குமரி மாவட்ட மீனவ மக்கள் “தங்கள் உறவுகளைக் காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள்” என்கிற கோரிக்கையோடு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தபோது, ஈரானிலிருந்து திரும்பிய திரு. பொன்.ரா. தனியார் துணிக்கடையைத் திறந்துவைக்கப் போனாரே தவிர, மீனவ மக்களை சந்திக்க வரவேயில்லை. தன்னுடைய தொகுதியிலேயே பல ஊர்களுக்கு நேரில் செல்ல முடியாமல் ஒளிந்து திரிகிறார் இவர் என்பதுதான் உண்மை.

இடிந்தகரையில் நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளில் எல்லாம் நான் கலந்துகொள்கிறேன். கடந்த பிப். 5 அன்று சாலை விபத்தில் அகால மரணமடைந்த இரண்டு இளைஞர்களின் நல்லடக்கத்தில் கலந்துகொண்டேன். இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. இன்பதுரை அவர்களை அங்கே சந்தித்து, எங்கள் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பபெற முதல்வரிடம் கோரிக்கை வையுங்கள் என்று பேசிவிட்டு, இடிந்தகரை தெருக்களில் நடந்து மக்களை சந்தித்துவிட்டு இரவு எட்டு மணிக்குப் பிறகுதான் ஊர் திரும்பினேன்.

[1] இடிந்தகரைக்கோ, அல்லது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள எந்த கடலோர மற்றும் உட்பகுதி ஊர்களுக்கோப் போவதற்கு நான் அணியமாக இருக்கிறேன், திரு. பொன்.ரா. என்னுடன் வரத் தயாரா? என்று கேட்கிறேன். திரு. பொன்.ரா. பதில் சொல்வாரா?

[2] திரு. பொன்.ரா. ஆதரவாளர்கள் ஏராளமானப் பணத்துடன் துறைமுக ஆதரவுப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் கணக்குகளை திரு. பொன்.ரா. மக்களிடம் காண்பிக்கத் தயாரா?

[3] கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவையின்றி அத்துமீறிப் போடப்படும் நெடுஞ்சாலைத் திட்டத்தில், சாலைகள் விரிவாக்கத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை, ஊழல்களை நானும், நண்பர்களும் ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவற்றை விரைவில் ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடுவோம். இது குறித்த ஒரு பொது விவாதத்துக்கு திரு. பொன்.ரா. தயாரா?

[4] குமரி மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள் எந்தவிதமான அனுமதியுமின்றி வெட்டி விற்கப்பட்டிருக்கின்றனவே? ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் தெற்கு மலை அடிவாரத்தில் பல இடங்களில் 40 அடி ஆழத்திற்குத் தோண்டி அனுமதியற்ற மணற்கொள்ளை நடந்திருக்கிறதே? வழுக்கம்பாறை பகுதியில் பாறைகள் முறைகேடாக தகர்க்கப்பட்டு விற்கப்பட்டிருக்கின்றனவே? இந்த வளக் கொள்ளைகளின் பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார், யார்? அவர்களுக்கு என்னென்ன லாபங்கள் கிடைத்திருக்கின்றன என்கிற விபரங்களை திரு. பொன்.ரா. வெளியிடுவாரா? விவாதத்துக்குத் தயாரா?

[5] “ஜூலைப் போராட்டம்” எனும் பெயரில் இந்து மாணவ, மாணவியருக்கும் உதவித் தொகைகள் வழங்கப்படவேண்டும் என்று மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்திய திரு. பொன்.ரா., தான் அமைச்சரான பிறகும், அவர் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. அரசு அமைந்து ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஆன நிலையிலும் ஏன் உதவித்தொகை இன்னும் வழங்கவில்லை என்று மக்களிடம் விளக்கமளிப்பாரா?

[6] பாரபட்சமற்ற, திறமைமிக்க மக்கள் பிரதிநிதியாக செயல்படாத திரு. பொன்.ரா.வை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடியுங்கள் என்று கோரிக்கைவைத்து குமரி மாவட்டம் முழுவதும் நடை பயணங்கள், பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கன்னியாகுமரி சரக்குப்பெட்டக மாற்று முனைய துறைமுகத் திட்டம் அனைத்து தரப்பு மக்களாலும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. சாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி மக்களைப் பிரித்தாண்டு ஏமாற்றிவிடலாம் என்று கனவுகண்டது நிராசையாகிவிட்ட நிலையில் தனிமனித தாக்குதல்களில், தவறான வழிகளில் இறங்குகிறார்கள் அமைச்சரும், அவரது ஆதரவாளர்களும்.

எனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று எச்சரித்து, நான் கவனமாக இருக்கும்படி பல நண்பர்கள் எனக்கு அறிவுரைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஏதாவது நிகழ்ந்தால், திரு. பொன்.ரா. அவர்களும், துறைமுக ஆதரவு போராட்டக்குழுத் தலைவர் திரு. வேல்பாண்டியன் அவர்களும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களின் குமரி மாவட்ட முன்னணித் தலைவர்களும்தான் பொறுப்பு என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds