நாங்குனேரி பிரச்சாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை.. பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Admk not sought bjp support in bypolls, pon.radhakrishnan

by எஸ். எம். கணபதி, Sep 30, 2019, 11:53 AM IST

விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை அதிமுக அழைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், தி இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி இப்போதும் நீடிக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுகவினர் எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. ஒருவேளை, டெல்லியில் உள்ள பாஜக அகில இந்திய தலைமையிடம் ஆதரவு கேட்டார்களா என்று தெரியவில்லை. இது பற்றி, நான் அதிமுகவினரிடம் பேசவில்லை. ஏன் அழைக்கவில்லை என்று அதிமுகவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
நாங்கள்(பாஜக) இப்போது அரசியல்சட்டப்பிரிவு 370 ரத்து விளக்கக் கூட்டம், மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்தி விழா ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறோம். அதனால் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. கூட்டணி விஷயத்தில் அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

பாஜகவை சேர்த்தால் சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது என்பது தவறான கருத்து. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள்(அதிமுக) அப்படி என்ன பார்த்து விட்டார்கள். நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்த போதும் சரி, திமுக கூட்டணியில் இருந்த போதும் சரி, கிறிஸ்தவர், முஸ்லிம் ஓட்டுகளை பெற்றிருக்கிறோம்.
உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அந்த தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் முடிவு செய்வோம்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

You'r reading நாங்குனேரி பிரச்சாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை.. பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Tirunelveli News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை