லலிதா ஜுவல்லரியில் திருடியது வடமாநில கொள்ளையர்கள்.. போலீஸ் விசாரணையில் அம்பலம்..

North indians involved in Trichy lalitha jewelery robbery

by எஸ். எம். கணபதி, Oct 3, 2019, 09:44 AM IST

திருச்சி லலிதா ஜுவல்லரியில் வடமாநில கொள்ளையர்கள்தான் கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என்றும், அவர்களுக்கு உடந்தையாக ஜுவல்லரியைப் பற்றி நன்கு தெரிந்த சிலர் இருந்திருக்கலாம் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வி.எம்.சி. காம்பளக்ஸ் என்ற 3 மாடிக் கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில்தான் லலிதா ஜூவல்லரி உள்ளது சத்திரம் பஸ் நிலையம் 24 மணி நேரமும் கலகலவென இருக்கும். அதனால், லலிதா ஜுவல்லரி உள்ள இடமும் இரவிலும் ஆள் நடமாட்டம் உள்ள பகுகுதிதான். மேலும், கடையின் காவலர்கள் 4 பேர் இரவு பணியில் இருந்துள்ளனர்.

அப்படியிருந்தும் நேற்று முன் தினம் இரவில் அங்கு பெரும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கடையின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருக்கிறது.

கடையின் இருபுற பக்கவாட்டிலும் காலியிடமாக உள்ளது. கடையின் இடது புறம் உள்ள இடம் பார்க்கிங் பகுதியாக பயன்படுத்தப்படுகிறது. கடையை சுற்றி 5 அடி உயரத்தில் சுற்றுச்சுவரும் உள்ளது. இடது பக்க சுற்றுச்சுவருக்கு உள்ளே கடையின் சுவரில் கொள்ளையர்கள், ஒரு ஆள் நுழையும் வகையில் துளை போட்டு அதன் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.

கொள்ளை சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் சென்னையில் இருந்து நகைக்கடை உரிமையாளர் கிரண்குமார் நேற்று பிற்பகலில் திருச்சிக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் 800 நகைகள் தான் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின நகைகள் என தரைத்தளத்தில் உள்ள அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. முதல் தளம் மற்றும் 2-வது தளத்தில் நகைகள் கொள்ளை போகவில்லை. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.13 கோடிதான்.

ஆனால், மீடியாக்களில் ரூ.50 கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளை போனதாக தவறாக தகவல் வெளியாகியுள்ளது. வேலைக்காரர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது போலீசாரின் விசாரணையில்தான் தெரியும் என்று தெரிவித்தார்
போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா, கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் கோபாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நேற்று காலையே கொள்ளை நடந்த லலிதா ஜுவல்லரியில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்துள்ளனர்.

புலன் விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல் கட்ட விசாரணையில், இந்த கொள்ளை நள்ளிரவு ஒரு மணி முதல் 3 மணிக்குள்ளாக நடைபெற்றிருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வடமாநில கொள்ளையர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு உடந்தையாக ஜுவல்லரியைப் பற்றி நன்கு தெரிந்த சிலர் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே சமயபுரம் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளை அடித்தவர்கள்தான், இந்த கொள்ளையிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளை நடந்த அன்றிரவு இந்த பகுதியில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களின் தரவுகளை பெற்று ஆராய்ந்து வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் சிக்கி விடுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You'r reading லலிதா ஜுவல்லரியில் திருடியது வடமாநில கொள்ளையர்கள்.. போலீஸ் விசாரணையில் அம்பலம்.. Originally posted on The Subeditor Tamil

More Tiruchirappalli News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை