எடப்பாடி பழனிசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு, சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததும், கூவத்தூரில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் அதிமுக அரசு பொறுப்பேற்றது. அந்த அரசு மீது 2017 பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி எதிராக இயங்கிக் கொண்டிருந்தது. இதனால், ஓ.பன்னீர்செல்வம், மாபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவின் 11 சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
அதிமுக கொறடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, மனுக்களைத் தள்ளுபடி செய்தது. சபாநாயகர் இந்த விஷயத்தில் முடிவு எடுக்காத நிலையில், அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் போடப்பட்ட அப்பீல் வழக்கில் சமீபத்தில் தீர்ப்புக் கூறப்பட்டது. இதிலும் சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நீதிமன்றம், சபாநாயகர் இந்த விஷயத்தில் உரிய முடிவெடுப்பார் என்று நம்புவதாகத் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இரு அணிகளும் சேர்ந்து விட்டதாலும், தற்போது ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக உள்ளதாலும் இந்த விஷயத்தில் அந்த 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோக வாய்ப்பில்லை என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.