சென்னை கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் மிகப் பெரிய காய்கறி, கனி, பூ மார்க்கெட் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது இந்த மார்க்கெட் மூடப்பட்டது. அதற்குப் பிறகு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போது இந்த மார்க்கெட் திறக்கப்பட்டது. அப்போது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இதற்குப் பிறகு, இந்த மார்க்கெட்டில் இருந்து சென்றவர்கள் மூலம் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்படப் பல மாவட்டங்களுக்கு கொரோனா பரவியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த மார்க்கெட் மூடப்பட்டு, திருமழிசை மற்றும் மாதவரம் பகுதிகளில் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை நிரந்தரமாக இடம் மாற்றப் போவதாகத் தகவல் பரவியது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தினர். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
கோயம்பேடு மார்க்கெட் ஒவ்வொரு கட்டமாகத் திறக்கப்படும். உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 18ம் தேதி திறக்கப்படும். மொத்த காய்கறி மார்க்கெட் செப்.28ம் தேதி திறக்கப்படும்.
இதன்பின்னர், கனி, மலர் அங்காடிகளும் திறக்கப்படும். சரக்கு லாரிகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மார்க்கெட் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படும். சரக்குகளை இறக்கிய பின்னர் நள்ளிரவு 12 மணிக்குள் அந்த வாகனங்கள் வெளியேறிவிட வேண்டும்.சில்லறை விற்பனைக்காகக் கொள்முதல் செய்ய வரும் சிறிய வாகனங்கள் அதிகாலை முதல் பகல் 12 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மக்கள் சில்லறை விற்பனையில் வாங்க வருவதற்கும் தடை விதிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.