அதிமுக கிளைமாக்ஸ்.. ஓபிஎஸ், இபிஎஸ் மோதலுக்கு செயற்குழுவில் முற்றுப்புள்ளி..

C.M. candidate issue comes to climax in Admk Executive commitee.

by எஸ். எம். கணபதி, Sep 28, 2020, 10:22 AM IST

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கிளைமாக்ஸ் காட்சியை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் செயற்குழுவில் சமரச உடன்பாடு ஏற்படுத்தப்படுகிறது. அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்குச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர் வரை இதில் கலந்து கொள்கின்றனர்.

சமூக இடைவெளி பின்பற்றுவதற்காக 3 பகுதிகளில் இருக்கைகள் அமைத்து, எல்இடி திரைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையே மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.மோதல் பின்னணி என்ன...
அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று 2 ஆக அதிமுக உடைந்தது. தர்மயுத்தம், கூவத்தூர் ஆட்டம், காலில் விழுதல் போன்ற பல காட்சிகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இதன்பின், பிரதமர் மோடி தலையீட்டில்(ஓ.பி.எஸ். அப்படித்தான் சொல்லியிருக்கிறார்) சமரச உடன்பாட்டில் இரு அணிகளும் இணைந்தன.அதன்படி, கட்சிக்குத் தலைமையாக ஓ.பி.எஸ், ஆட்சிக்குத் தலைமையாக இ.பி.எஸ். என்று முடிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் ஒன்று சேர்ந்தே அனைத்து முடிவுகளையும் மேற்கொண்டனர்.சில மாதங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே கட்சியிலும், ஆட்சியிலும் கோலோச்சத் தொடங்கினார். ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை வளைத்தார் அல்லது ஓரங்கட்டினார். இதனால், கட்சிக்குள் கசமுசா ஏற்பட்டாலும், இருதரப்பிலும் ஆட்சி அதிகாரம் மற்றும் பணத்தின் மீதுள்ள பற்றினால் ஆட்சியைக் கவிழ்க்காமல் அமைதியாக இருந்தனர். இப்போது ஆட்சி முடியும் தருவாயில் இருதரப்பிலும் பிரச்சனையைக் கிளப்பியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி சமீபத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், முதல்வரைப் பாராட்டி கவிதை எழுதியிருந்தார். அதில் காலமெல்லாம் நீயே நிரந்தர முதல்வராகி என்று எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டார். அடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, முதல்வரைத் தேர்ந்தெடுப்போம். கடந்த காலங்களில் அப்படித்தான் தேர்வு செய்தோம் என்று பதிலளித்தார். அதாவது, மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக வருவார் என்பதை மறுக்கும் வகையில் பேட்டியளித்தார்.

இதற்குப் பிறகு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு ட்விட் போட்டார். அதில், எடப்பாடியார் என்றும் முதல்வர். அவர் தலைமையில்தான் தேர்தல் களம் காண்போம் என்று கூறியிருந்தார். மேலும், அதை ஓங்கியடித்துச் சொல்லும் வகையில் பேட்டியும் கொடுத்தார். அடுத்த நாள், அதையே அமைச்சர் உதயகுமாரும் சொன்னார்.இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தி அடைந்தார். இது கடந்த ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியது. முக்கிய அமைச்சர்கள் கூட்டமாக முதல்வர் வீட்டுக்கும், துணை முதல்வர் வீட்டுக்குத்தாக மாறி, மாறிச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 5 மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.

அதில் முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சியினர் யாரும் வாய் திறக்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இருவரும் சேர்ந்தே கட்சிக்காரர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டாலும் அதற்குப் பின்பும் மோதல் தொடர்ந்தது. அமைச்சர் கருப்பணன் கடந்த செப்.8ம் தேதியன்று அளித்த பேட்டியில், அடுத்த தேர்தலிலும் எடப்பாடியே முதல்வராகத் தொடர்வார் என்று கூறி, மீண்டும் பிரச்சனையைக் கிளறி விட்டார். இதற்குப் பிறகு, ஓ.பி.எஸ். சொந்த மாவட்டமான தேனியில் அதிமுகவினர் சிலர் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதில், மீண்டும் எடப்பாடி; வேண்டும் எடப்பாடி என்று எழுதப்பட்டிருந்தது. ஓ.பி.எஸ். சொந்த மாவட்டமான தேனியிலேயே எடப்பாடி ஆதரவாளர்கள் இருப்பது உறுதியானது.

இந்த சூழ்நிலையில், செயற்குழுவுக்கு முன்பே இருதரப்பிலும் ஆலோசித்து ஒரு சுமுக முடிவு எட்டியிருப்பதாகத் தெரிகிறது. அதைச் செயற்குழுவில் அறிவிக்க உள்ளார்கள். இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கட்சியில் எடப்பாடிக்குத்தான் அதிகமான ஆதரவு உள்ளது. ஆனாலும், அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றால் ஓ.பி.எஸ். பிரச்சனை ஏற்படுத்துவார். பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடியை ஆதரித்தாலும், பலர் ஓ.பி.எஸ். பின்னால் போகவும் வாய்ப்பு ஏற்படலாம். அதனால் இப்போதைக்கு பிரச்சனையை ஏற்படுத்த எடப்பாடியே விரும்பவில்லை. அதனால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து விட்டு மீண்டும் பொதுச் செயலாளர் பதவி கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதே சமயம், அவைத் தலைவர் பதவியை ரத்து செய்து விட்டு, திமுகவைப் போல் தலைவர் பதவி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அப்படிக் கொண்டு வந்தால், தலைவராக எடப்பாடியும், பொதுச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பேற்பார்கள். இருவரும் சேர்ந்தே எல்லா முடிவுகளையும் எடுப்பார்கள். அவை ஓ.பி.எஸ். பெயரில் வெளியிடப்படும். இந்த யோசனைக்கு எதிர்ப்பு கிளம்பினால், செயற்குழுவில் வழக்கம் போல் பொதுவாகப் பேசிவிட்டு, உப்புச்சப்பில்லாத கூட்டறிக்கையை மட்டும் வெளியிடுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை