நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் 2 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை துவங்கியது.நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதலின்படி இரண்டு புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
3 ஆண்டு B.Voc (Food Processing. Analytical an Quality Control Techniques) படிப்பிற்கான பாடத்திட்டத்தில் உணவு பதனிடுதல், உணவு தரக் கட்டுப்பாடு மற்றும் உணவு பரிசோதனையில் உள்ள கோட்பாடுகளைப் பாடமாகப் படிக்கும் போதே உணவு பதனிடும் தொழிற்சாலையில் திறன் மேம்பாட்டிற்கு உள்ளிருப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
மற்றொரு பாடத்திட்டமான advanced Diploma in Agriculture,organic Farming and Mushroom Cultivation' பிரிவில் இயற்கை வேளாண்மை மற்றும் காளான் வளர்ப்பில் மேம்படுத்தப்பட்ட பட்டயப்படிப்பு அளிக்கப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தில் இயற்கை வேளாண் பயிர் செய்யும் முறை, நுண்ணுயிர் இயற்கை உரம் தயாரித்தல், பஞ்சகாவ்யம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், பண்ணை மேலாண்மை குழு அமைத்தல், விளைபொருள் சந்தைப்படுத்தல், இயற்கை வேளாண் பொருட்கள் சான்று பெறுதல், ஏற்றுமதி கொள்கைகள் போன்றவற்றின் கோட்பாடுகளைப் படிக்க முடியும். இதனைப் பல்கலைக்கழகத்தில் பாடமாகப் படிக்கும் போதே தன்னார் தொண்டு நிறுவனம், தனியார் மற்றும் அரசு வேளாண் பண்ணையில் நேரடி உள்ளிருப்பு திறன் பயிற்சியும் குறுகிய கால பயிலரங்கம் மூலம் திறன் மேம்பாட்டினுடன் கூடிய உடனடி வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது .
தற்போதைய சூழலில் உணவு பதனிடும் தொழிற்சாலையிலும், இயற்கை வேளாண்மைத் துறை சார்ந்த பணிகளில் அதிகமான பணியிடங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பணியிடங்களுக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்கு ஏற்றார்போல் தேசிய தொழிற்திறன் தகுதி வரையறையின் படி நெல்லை பல்கலைக்கழகம் பாடத்திட்டம் தயாரித்து திறன் மேம்பாட்டிற்கு உள்ளிருப்பு பயிற்சி வேலைவாய்ப்புகளுக்குத் தொழிற்சாலைகள் மற்றும் இயற்கை வேளாண்மை பண்ணைகளுடனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது.இந்த பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்று பயிற்சி தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
இந்த இரண்டு படிப்புகளுக்கும் தற்போது மாணவர் சேர்க்கை பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் சேர்க்கைக்கு வரும் 28 ம் தேதி கடைசி நாள் எனவும் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.வேலை வாய்ப்புகளைப் படிக்கும் போதே உறுதி செய்யும் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் சேர்க்கை விவரம் பயிற்சிக் கட்டணம் ஆகிய விபரங்களைப் பல்லைக்கழகத்தின் www.msuniv ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும் அதில் விண்ணப்பப் படிவத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .