நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து துணை பொது மேலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நெல்லை ஆவின் நிறுவனத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு காலியாக இருந்த இளநிலை செயல் அலுவலர், சூபர்வைசர் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 15 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 10 பேருக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. தேர்வு செய்யப்பட்டவர்களில் 5 பேர் தகுதியற்றவர்கள் என மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சேர்ந்த முருகேசன் என்பவர் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அப்போதைய ஆவின் உதவி பொது மேலாளர் ரங்கநாததுரை, சித்ரா தேவி,மைதிலி, தனபாலன் ஆகிய நான்கு பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லஞ்சம் கொடுக்காததால் வேலை வாய்ப்பை இழந்த சேர்மத்துரை என்பவர், கூறுகையில் ஆவின் நிறுவனத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியற்ற நபர்களைப் பணி அமர்த்தி உள்ளனர் . முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் தகுதியான நபர்களை பணியில் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.