தீபாவளி மதுவிற்பனை ரூ.466 கோடியை எட்டியது.. மதுரை குடிமகன்கள் முதலிடம்..

தமிழ்நாட்டில் இந்தாண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.466 கோடியைத் தொட்டுள்ளது.

by எஸ். எம். கணபதி, Nov 15, 2020, 15:53 PM IST

மதுபான விற்பனையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை அரசின் டாஸ்மாக்(தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) நிறுவனமே ஏற்று நடத்தத் தொடங்கிய பிறகு விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறை நாட்களில் மதுவிற்பனை அதிகரிக்கும்.

இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவம் டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.13ம் தேதியன்று 227 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கும், நவ.14 தீபாவளியன்று 237 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இரண்டே நாளில் மொத்தம் ரூ.465 கோடி 79 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது.

மதுரை மண்டலத்தில் 103 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி, முதலிடம் பிடித்துள்ளது. அடுத்து, திருச்சி மண்டலத்தில் 95 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 94 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 87 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 84 கோடியே 56 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளிலும் சேர்த்து 355 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடைபெற்றிருந்தது. இந்தாண்டு அதைவிட 111 கோடி ரூபாய் அதிகரித்து 465 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading தீபாவளி மதுவிற்பனை ரூ.466 கோடியை எட்டியது.. மதுரை குடிமகன்கள் முதலிடம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை