சசிகலா வரவேற்பில் அதிமுக கொடியை பயன்படுத்தலாமா? காவல்துறை என்ன செய்யும்..

by எஸ். எம். கணபதி, Feb 5, 2021, 10:18 AM IST

சசிகலாவை வரவேற்கச் செல்லும் தொண்டர்கள் அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் என்னவாகும்? காவல்துறையினர் அவர்களைக் கைது செய்வார்களா?பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அந்த விடுதிக்குச் செல்லும் போது ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுக கொடி பறக்க விட்டு, பயணம் செய்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். அதிமுக கொடியையோ, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களையோ சசிகலா பயன்படுத்தக் கூடாது என்று கூறினார்.

அதே போல், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதற்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதில் அளிக்கையில், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவே உள்ளார். அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்துகிறார். சசிகலா தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்என்றார். இதன்பின்னர், சசிகலா வரும் 8ம் தேதி சென்னை திரும்புவார் என்றும், அவருக்கு ஓசூர் முதல் சென்னை வரை ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் அவைத் தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று(பிப்.4) டிஜிபியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தனர். அதில் அவர்கள், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவரும், அவரைச் சார்ந்தவர்களும் அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.மேலும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையம் கடந்த 23.11.2017ம் தேதி முடிவு செய்து, அதிமுக கொடி, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை சசிகலா தொடர்ந்த மனு தள்ளுபடியாகி விட்டது. எனவே, அவர்கள் இதற்கு மேல் ஐ.நா.சபைக்குத்தான் செல்ல வேண்டும் என்றார்.

இது பற்றி சசிகலா ஆதரவு அதிமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் சமயங்களில் அந்த தேர்தலுக்காக இரட்டை இலை, அதிமுக கொடி யாருக்கு என்பது பற்றித்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுக்குழு கூடியது. அதில் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து சசிகலாவைத் தற்காலிகப் பொதுச் செயலாளராக ஏகமானதாகத் தேர்ந்தெடுத்தனர். அதற்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராகவே சசிகலா சிறைக்குச் சென்றார். அதிமுக சட்டவிதிகளின்படி ஒருவரை நீக்கவோ, சேர்க்கவோ பொதுச் செயலாளருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. அதே போல், பொதுச் செயலாளருக்குத் தெரியாமல் பொதுக்குழுவை யாரும் கூட்டவே முடியாது. அதனால்தான், சசிகலாவை நீக்கியும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஏற்படுத்தியும் மேற்கொண்ட அத்தனை முடிவுகளும் செல்லாது என்று கூறி, சசிகலாவால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு முடியும் வரை அல்லது அதில் அவருக்கு ஏதேனும் தடை உத்தரவு பிறப்பிக்கும் வரை அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்தலாம். அதே போல், சசிகலாவை வரவேற்க வரும் அதிமுக நிர்வாகிகள் கொடியைப் பயன்படுத்துவதைக் காவல் துறையினர் உள்பட யாராலும் தடுக்க முடியாது. கொடியுடன் வந்து சசிகலாவுக்கு அவர்கள் வரவேற்பு அளித்து விட்டு சென்றதற்கு பிறகு வேண்டுமானால் கட்சியில் இருந்து அவர்களை நீக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இது பற்றிக் காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சசிகலாவை மட்டுமே அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்ல முடியும். அதிமுக உறுப்பினர் கார்டுடன் வருபவர்களிடம் நாங்கள் கொடியைப் பறிக்க முடியாது. கடந்த 1994ம் ஆண்டில் திமுகவில் இருந்து வைகோ பிரிந்த போது, அவர் சென்னை அண்ணாசாலையில் பேரணி நடத்தினார். அப்போது அந்த பேரணியில் திமுக கொடியைப் பயன்படுத்த ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

ஆனாலும் வைகோ ஆதரவு தொண்டர்கள் திமுக கொடியுடன்தான் பேரணி நடத்தினார்கள். காவல் துறை அப்போது பேரணியை அமைதியாக நடத்தி முடிக்கவே நடவடிக்கை எடுத்தோம். கொடிகளைப் பறிக்கவில்லை என்று தெரிவித்தார்.இந்த சூழ்நிலையில், சசிகலாவை வரவேற்க அதிமுக நிர்வாகிகளோ, தொண்டர்களோ அந்த கட்சியின் கொடியுடன் வருவதை காவல்துறையினரால் தடுக்க முடியாது. சசிகலாவிடம் சென்றுதான் அவரது வரவேற்பு நிகழ்ச்சிகளைக் கைவிடுமாறு கோரிக்கை விட முடியும். அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா ஆதரவு நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்ய வேண்ம். இதில் எதைக் காவல் துறை மேற்கொள்ளுமோ தெரியவில்லை. ஆக மொத்தத்தில் பிப்.8ம் தேதி பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.

You'r reading சசிகலா வரவேற்பில் அதிமுக கொடியை பயன்படுத்தலாமா? காவல்துறை என்ன செய்யும்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை