ஆட்சியாளர்களின் அதிகாரம் 15 நாள்களில் முடிவுக்கு வந்து விடும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வைக்க வேண்டும் என திமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, அ.ம.மு.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராக மா.சேகர் மகள் திருமணம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரனுக்கு திருமண மேடைக்கு வந்த தினகரனுக்குச் சிறிய அளவினான வெண்கலத்தில் செய்யப்பட்ட ஜெயலலிதா சிலை, வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டன.
தொடர்ந்து, திருமண நிகழ்ச்சியில் உரையாற்றிய டிடிவி தினகரன், சசிகலா எதற்காக தண்டிக்கப்பட்டார், என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். சட்டத்தின் முன் சசிகலா தண்டிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் மன்றத்தில் தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். சதி காரணமாகத்தான் சசிகலா சிறைக்குச் சென்றார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா மேல் எத்தனை பழிச்சொற்கள் விழுந்தன என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி ஒரு பழிச்சொல்லை தமிழகத்திலுள்ள எந்தப் பெண்மணியும் சந்தித்திருக்க மாட்டார். இது உண்மையான தியாகத்துக்குக் கிடைத்த பரிசு என்றார்.
இந்த ஆட்சி அதிகாரம் நாங்கள் கொடுத்தது. இந்த நான்காண்டு காலம் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும். கல்லாகட்டி, பர்சன்டேஜ் வாங்கியவர்கள்,100 சதவிகிதம் சகிகலாவைச் சேர்க்க மாட்டோம். டி.டி.வி.தினகரன் தனிமரம் எனக் கூறுகின்றனர். இந்தத் தனிமரத்துக்கு எத்தனை ஆணிவேர் இருக்கின்றன என பெங்களூரிலிருந்து சென்னை வரை பார்த்தீர்களா? என்றார். சசிகலா தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டரீதியாக சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.
இன்னும் 15 தினங்களில் மாறிவிடும். மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவித்தால் தெரிந்துவிடும். ஸ்லீப்பர் செல் என்பவர்கள் எங்கள் நலம் விரும்பிகள், ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்புவர்கள். அவர்கள் வரும் நேரத்தில் வருவார்கள். நாங்கள் நிச்சயம் அ.தி.மு.க என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம்" என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, சசிகலா வரவேற்புக்கு 192 கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கூறுகிறார்கள். என்னமோ அந்தத் தொகையை இவர்கள் கொண்டுவந்து கொடுத்ததுபோலவே பேசுகின்றனர். வந்திருந்த அனைவரும் சொந்தச் செலவில் குடும்பத்தோடு சின்னம்மாவை வரவேற்க வந்தனர்" என்றார்.