தமிழகம் முழுவதும் காவிரி கரை, முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக உறுதுணையாக இருக்கும் தண்ணீரை தெய்வமாக மதித்து, நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் தமிழகம் முழுவதும் காவிரி டெல்டா மாவட்டம் மற்றும் முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டியுள்ளது. நதியில் புனித நீராடிய பின்னர், இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி காவிரி அன்னையை வழிபட்டனர்.
வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிட்டார்கள். தலை ஆடி கொண்டாடும் புதுமண தம்பதிகள், திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை வாழைஇலையில் வைத்து காவரி ஆற்றில் விட்டனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானி கூடுதுறையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் திருச்சி, தஞ்சாவூர், சேலம், கரூர், நாமக்கல், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக உற்சாகமின்றி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடிய மக்கள், நடப்பாண்டு காவிரியில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால், பெரும் மகிழ்ச்சி உள்ளனர்.