முட்டை கொள்முதல் ஒப்பந்தத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
2017-18 ஆண்டுக்கு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்குபெறுவதை தடை விதித்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய நிபந்தனைகளால் தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒப்பந்தத்துக்கு தடை விதித்து வெளி மாநில கோழி பண்ணைகளையும் அனுமதிக்க கோரி கரூரை சேர்ந்த 4 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசு அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு வரும் 14ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், முட்டை கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.