ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் திடீரென கனமழை கொட்டி தீர்த்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கையொட்டியுள்ள வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஈரோட்டில் காலை முதலே அதிகளவில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்த மாலையில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்ய தொடங்கியது.
ஈரோடு பேருந்து மற்றும் ரயில் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன் சத்திரம், திண்டல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கு மேல் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் கோவை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில், நண்பகல் 1 மணிமுதல் பலத்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் 4 மணி வரை மழை நீடித்தது. சாரல் மழை, பனிப்பொழிவு காரணமாக கடுங்குளிர் நிலவியது. மேலும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.