ஸ்டாலினுக்கு ‘ஆப்பு’ - முதல்வர் கனவில மிதக்கும் துரைமுருகன்...ராமதாஸுடன் ரகசிய ஆலோசனை- Exclusive
தகுதிநீக்க வழக்கு, அடுத்தடுத்த ரெய்டுகள், சம்பந்தி மீதே புகார் என ஆட்சியைக் கலங்கடிக்கும் சம்பவங்கள் நடந்தாலும், நாற்காலியை விட்டுக் கொடுக்காமல் ஆட்சி செய்து வருகிறார் எடப்பாடி. 'மோடியும் அண்டை மாநில ஆளுநரும் இருக்கும் வரையில் நமக்குக் கவலையில்லை' என்ற மனநிலையில் இருக்கின்றனர் அதிமுக புள்ளிகள்.
லோக்சபா தேர்தலில் கூட்டணி சேருவதற்கு முன்னதாக, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் முடிவுகளை நம்பியிருக்கிறார் மோடி. 'இந்த முடிவுகளுக்குப் பிறகு மாநிலக் கட்சிகள் நம்முடன் கூட்டணிக்கு வருவார்கள்' என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
கடந்த லோக்சபா தேர்தலைப் போல, வலுவான பிரசாரத்தை மட்டுமே பாஜக செய்ய இருக்கிறது. 'தெற்கில் சபரிமலை, வடக்கில் ராமர் கோயில்' என்ற இரண்டு ஆயுதங்களை அவர்கள் நம்பியிருக்கின்றனர்.
'தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்து வெற்றி பெற வேண்டும்' எனத் திட்டம் வைத்திருக்கின்றனர். அதற்கேற்ப, பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக அமைச்சர்கள் குறித்து அதிர்ச்சியாக விவரங்களைத் தெரிவிக்கின்றனர் பாஜக புள்ளிகள். இதைப் பற்றிப் பேசும் அவர்கள், ' தமிழகத்தில் வெற்றிக் கூட்டணி அமைப்பது ஒன்றுதான் மோடியின் இலக்காக இருக்கிறது. கடந்த தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் பாஜக அணியில் இருந்தன.
இந்தமுறை அதிமுகவைத் தவிர, வேறு யாரும் மோடிக்கு இணக்கமாக இல்லை. திமுக வலுவான அணியை அமைத்துவிட்டால், பாஜக மண்ணைக் கவ்விவிடும் என்பதை நாங்கள் உணர்ந்து வைத்திருக்கிறோம்.
அதற்கேற்ப, திமுக கூட்டணியை உடைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. துரைமுருகன் பேசுவதும் அதில் ஒரு பகுதியைத்தான். அவர் எங்களது ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார்.
மோடியின் ஆசீர்வாதம் இருப்பதால், பல தவறுகளைத் தமிழக அமைச்சர்கள் செய்கின்றனர். ஒருகாலத்தில் கார்டன் பெயரில் காண்ட்ராக்டர்களிடம் நிதி வாங்கிக் கொண்டிருந்தனர்.
இப்போது கார்டன் கதவுகள் மூடப்பட்டுவிட்டதால், அந்த நிதியை எல்லாம் பாஜக பெயரைச் சொல்லி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இது மோடி ஃபண்ட், இது அமித் ஷா ஃபண்ட் என ஒவ்வொன்றுக்கும் பெயர் சூட்டியுள்ளனர்.
இதைப் பற்றி நிர்மலா சீதாராமனின் கவனத்துக்கு ஆதாரத்தோடு கொண்டு சென்றுள்ளனர். அவரும் இதை மோடிக்குப் பாஸ் செய்திருக்கிறார். இப்போது தமிழக அமைச்சர்களின் ஊழல் விவரங்களையும் ஆதாரத்தோடு சேகரித்து வருகிறது வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு. தேர்தல் நெருக்கத்தில் அணிகள் அமைவதைப் பொறுத்து இந்த ஆதாரங்களை பகிரங்கப்படுத்துவோம்' என்கின்றனர் பாஜக பிரமுகர்கள்.
- அருள் திலீபன்