ஜெயலலிதா மறைந்த தினமான டிசம்பர் 5ம் தேதியன்று மெரினா பீச்சில் செல்வாக்கைக் காட்டத் திட்டமிட்டிருக்கிறார் திவாகரன். அழகிரியைப் போல பெரும்படையைத் திரட்டிக் காட்டி, தினகரன் கூடாரத்துக்கு அச்சமூட்ட இருக்கிறாராம்.
அமமுக பொதுச் செயலாளர் சசிகலாவை இன்னமும் 'முன்னாள் சகோதரி' என்றுதான் அழைத்து வருகிறார் திவாகரன். தினகரன் மனைவி அனுராதாவின் விமர்சனத்துக்குப் பிறகு குடும்பத்தில் யாருடனும் திவாகரன் நெருக்கமாக இல்லை.
அமமுக என்ற பெயரில் திராவிடம் இல்லாததால் முறுக்கிக் கொண்டு போனார் நாஞ்சில் சம்பத். ஆனால் திவாகரனோ, என்னுடைய கட்சியில் அண்ணாவும் இருப்பார், திராவிடமும் இருக்கும் எனக் கூறி அண்ணா திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். கஜா புயல் பாதிப்பிலும் இந்தக் கட்சி டெல்டா மக்களுக்கு உதவி செய்தது. ஒருவேளை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், திருப்பரங்குன்றம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மூன்று தொகுதிகளை இலக்காக வைத்திருந்தார். புயல் பாதிப்புகளால் தேர்தல் தேதி தள்ளிப் போவதை அவர் விரும்பவில்லை. இதற்கிடையில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக திராவிடக் கட்சிகள் எல்லாம் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டன. பெயரில் திராவிடம் இருந்தாலும் திவாகரன் கட்சியை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதைப் பற்றி திவாகரனும் அலட்டிக் கொள்ளவில்லை. 'இரண்டு எம்.பி தொகுதிகளில் எனக்கு செல்வாக்கு இருக்கிறது. என்னுடைய தயவு இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது' எனப் பேசி வருகிறார் அவர்.
இருப்பினும், தன்னுடைய செல்வாக்கைக் காட்டுவதற்காக ஜெயலலிதா இறந்த தினத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். கருணாநிதி சமாதியில் கூட்டத்தைக் கூட்ட முயற்சித்தார் அழகிரி. அதைவிட ஒட்டுமொத்த டெல்டாவையும் மெரினாவில் கூட வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் திவாகரன்.
'வங்கக் கடலோரத்தில் துயில் கொள்ளும் சிங்கத் தலைவிக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார் திவாகரன். அனைவரும் அலைகடலெனத் திரண்டு வாரீர்' என நோட்டீஸ் அடிக்கத் தொடங்கிவிட்டனர் அ.தி.கவினர்.
மெரினா கடற்கரையில் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேரையாவது அழைத்து வந்துவிட வேண்டும் எனக் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் தனது வலிமையைக் காட்ட இந்தக் கூட்டம் உதவும் எனக் கணக்கு போட்டிருக்கிறாராம் திவாகரன்.
-அருள் திலீபன்