சிலை கடத்தலில் ஓர் அர்ச்சகர் கூட ஏன் கைதாகவில்லை! கவனிக்கப்பட வேண்டிய 6 விஷயங்கள்!!

Why priest not arrest in statue kidnapping case?

Dec 21, 2018, 13:06 PM IST

தமிழகக் கோயில்களில் சிலைகள் திருட்டுப் போன வழக்கில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போலீஸ் டிஎஸ்பிக்கள் சிலர் டிஜிபியும் மனு அளித்துள்ளனர்.

பொன்.மாணிக்கவேலின் விசாரணை முறைகளைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

சிலைக்கடத்தில் வழக்கு தொடர்பாக சில விஷயங்களைப் பட்டியிலிட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார்.

அவர் கூறுவது பின்வருமாறு:

'இந்து அறநிலையத்துறையை எப்படியாவது கலைத்துவிடவேண்டும். கோயில்களைக் கைப்பற்றிக்கொண்டுவிடவேண்டும்' என்று ஒரு கும்பல் திட்டமிட்டு வேலை செய்கிறது. மதம், அரசியல், காவல்துறை என இந்த வலைப்பின்னல் நுட்பமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இது பல்வேறு பரிமாணங்கள் கொண்டது. ' ஊழல்' என்ற வாதம் எப்படி பயன்படுத்தப்பட்டதோ அப்படித்தான் சிலை கடத்தல் என்பதை பொன்.மாணிக்கவேல் பயன்படுத்துகிறார்.

அவரது சார்பு என்ன என்பதைவிட அவரது செயல்பாடு யாருக்கு உதவுகிறது என்பதுதான் முதன்மையானது.

தஞ்சைப் பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்திருப்பதும்,' சிலை கடத்தல் வழக்குகளில் ஏன் அர்ச்சகர் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை?' என்ற நீதிபதி கே.சந்துரு அவர்களின் கேள்வியும் இந்நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்து அறநிலையத்துறையைக் காப்பாற்றவேண்டுமெனில் அதை வலிமைப்படுத்தவேண்டும்.அதற்காக மேற்கொள்ளவேண்டிய சில நடவடிக்கைகளை இங்கே தருகிறேன்:

1. தற்போதுள்ள கோயில்களில் 60% கோயில்கள் தனியார்வசம் உள்ளன. அவற்றில் பக்தர்களின் வருகையின் அடிப்படையில் பிரபலமாக உள்ள கோயில்கள் அனைத்தையும் இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவரவேண்டும். அதற்கான சட்டத் திருத்தம் செய்யப்படவேண்டும்.

ஒருவருக்கு தனியார் இடத்தில் சிலை வைப்பதற்கே 1008 கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அரசு , நெடுஞ்சாலைகளின் நெடுகிலும் பிரம்மாண்ட சிலைகளை நிறுவி அதை வைத்து ஆன்மீக வணிகம் செய்பவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காதிருப்பது சட்டப்படி தவறு.

2. சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டம் ஒன்றை இயற்றவேண்டும். அர்ச்சகர்கள் கோயிலின் பணியாளர்களே தவிர உரிமையாளர்கள் அல்ல என்ற உண்மை உறுதிப்படுத்தப்படவேண்டும்.

3. ரவிசங்கர், ஜக்கி, நித்தியானந்தா உள்ளிட்ட நவயுக சாமியார்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆன்மீகம் என்ற பெயரால் அவர்கள் இணை அதிகார மையங்களை ( Parellel power centres) உருவாக்குவதை சட்டரீதியாகத் தடுக்கவேண்டும்.

4. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்கள் எதிலும் சாதிய, பாலின பாகுபாடுகள் காட்டப்படக்கூடாது என்பதை அரசு உறுதி செய்யவேண்டும். இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்கள் பலவற்றில் இப்போதும் எஸ்சி பிரிவினர் வழிபட முடியாத கோயில்கள் உள்ளன. அதைப்பற்றி மௌனம் காப்பது முறையல்ல.

5. சிலை திருட்டு குறித்துப் பேசும்போது இப்போதைய இந்து ஆலயங்களில் இருந்த புத்தர் சிலைகள் களவாடப்பட்டதையும், அழிக்கப்பட்டதையும் அதற்குப் பொறுப்பானவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பதையும் சேர்த்துப் பேசவேண்டும்.

6. கோயில்களை பக்தியின் அடையாளமாக மட்டுமே பார்க்காமல் அவை நமது கலைகளின் கருவூலங்கள் என்ற விழிப்புணர்வை இளைய தலைமுறையிடம் உருவாக்கினால் மட்டுமே அவற்றைப் பாதுகாக்க முடியும். கலை வரலாறு குறித்து பள்ளிக் கல்வியில், உயர் கல்வியில் பாடங்களை சேர்ப்பது அதற்கான துவக்கமாக இருக்கும்.

-அருள் திலீபன்

You'r reading சிலை கடத்தலில் ஓர் அர்ச்சகர் கூட ஏன் கைதாகவில்லை! கவனிக்கப்பட வேண்டிய 6 விஷயங்கள்!! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை