திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டால் அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரனும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் ஸ்டாலின், திமுக வேட்பாளராக களம் இறங்க வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்கள் விருப்பம்.
இச்செய்தியை முதன் முதலில் நமது இணையதளம் வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழக அரசியல் களத்தின் தற்போதைய விவாதப் பொருளாகவும் மாறி இருக்கிறது.
இந்நிலையில் அமமுகவினர், திமுகவை தோற்கடிப்போம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் ஸ்டாலின் வேட்பாளராவது உறுதி எனில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருவாரூர் சொந்த தொகுதி என்பதால் தினகரன் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
ஏற்கனவே தினகரனின் மாமா திவாகரன் தரப்பு திருவாரூரில் போட்டியிட்டு வெல்வோம் என கூறிவருகிறது. இதை நாம் ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.
மண்ணில் கால்படாத மக்கள் செல்வர் தினகரன்! - நக்கலடித்த ஜெய் ஆனந்த்
தற்போதைய நிலவரப்படி ஸ்டாலின் போட்டியிட்டால் தினகரனும் திவாகரனும் திருவாரூரில் களம் இறங்கும் நிலைமை உள்ளது. இப்படி மூன்று கட்சி தலைவர்களே களம் காண்பதால் அதிமுகம் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்த வாய்ப்பு உள்ளது.
ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கத்துக்கு கூட அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்பது அதிமுகவினர் தகவல். சட்டசபை தேர்தலில் வைத்திலிங்கத்தை திவாகரன் தான் உள்ளடி வேலைகளால் தோற்கடித்தார். இதனால்தான் வைத்திலிங்கத்துக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை கொடுத்தார் என்பதும் தஞ்சை தொகுதி இடைத்தேர்தலின் போதே வைத்திலிங்கம் வேட்பாளராகக் கூடும் என தகவல் பரவியதும் குறிப்பிடத்தக்கது.