கேமிங் கம்ப்யூட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

Things to look out for when buying a gaming computer

by SAM ASIR, Sep 7, 2020, 17:54 PM IST

எல்லோரும் லேப்டாப் வாங்கும் காலம் இது. ஆனாலும் மேசைக் கணினி எப்பொழுதும் நல்ல முதலீடாகவே கருதப்படுகிறது. கிராபிக்ஸ், அனிமேஷன் தொடர்பான பணிக்கு அல்லது கணினி விளையாட்டான கேமிங் தேவைப்படுவோருக்கு லேப்டாப்பை விடத் தனி கம்ப்யூட்டரே பொருத்தமானது. லேப்டாப் என்னும் மடிக்கணினியை விடத் தனி கணினி அதிககாலம் உழைக்கக்கூடியது. தேவைக்கேற்ப அதை மேம்படுத்திக்கொள்ள முடியும்.புதிதாக கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால் பின்வருபவற்றைக் கவனிக்க வேண்டும்.

சர்வீஸ் மற்றும் வாரண்டி

தனித்தனியாக உதிரிப் பாகங்களை வாங்கி நீங்களாகவே ஒரு கணினியைப் பொருத்தாமல் (அசெம்பிளிங்) நிறுவனத்தின் தயாரிப்பை வாங்க இருக்கிறீர்கள் என்றால் வாங்கும் கணினியைத் தேர்ந்தெடுத்த பின்னர், விற்பனைக்கு பின்னான சேவைகள் குறித்துக் கண்டிப்பாக விசாரிக்கவேண்டும். கணினிக்கான சேவை மையங்கள் எங்குள்ளன? கணினிக்கான உத்திரவாதம் (வாரண்டி) போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.

கணினியில் பழுது ஏற்பட்டால் அதை நீங்கள் சேவை மையத்திற்குத் தூக்கிக்கொண்டு அலைய முடியாது. பழுது நீக்குவதற்கு ஒருவர் சேவை மையத்திலிருந்து உங்கள் வீட்டுக்கு வரவேண்டும். அதுபோன்ற வசதிகளை உறுதி செய்து கொள்ளுங்கள். வாரண்டி காலத்தை நீட்டிக்க வழியுண்டா என்பது குறித்தும் விசாரியுங்கள். வாரண்டி காலத்தில் இருக்கும் கணினியில் நீங்களாக எதையாவது பொருத்த முயற்சித்து பழுதுபடுமாயின் உத்திரவாதம் இல்லாமற் போகும். ஆகவே, கவனம் அவசியம்

பாகங்களின் தரம்

நீங்கள் வாங்கப்போகும் கணினியைத் தெரிவு செய்வதற்கு முன்பு, அதன் விசைப்பலகை (கீ போர்டு), மவுஸ், வெப்காம் (காமிரா) எல்லாவற்றின் தரத்தினையும் ஆராய்ந்து பாருங்கள். தரம் குறைந்த உதிரிப்பாகங்கள் கணினியின் செயல்திறனைப் பாதிக்கும். உங்களுக்குத் தேவையான தரத்தில் பாகங்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

இயக்கவேகம் (RAM)

விண்டோஸ் கணினியைப் பொறுத்தமட்டில் 16ஜிபி இயக்கவேகத்திற்குக் குறையாமல் வாங்கவேண்டும். நீங்கள் கேமிங் தேவைக்காக வாங்கினால், விளையாடுவதற்குக் குறைந்தது எவ்வளவு இயக்கவேகம் தேவை என்பதை அறிந்துகொள்வது நல்லது. 16 ஜிபி இயக்கவேகம் கொண்டதாக வாங்கினால் பயன்படுத்த நன்றாக இருக்கும்.

பிராசஸர்

Intel பிராசஸர் வாங்குவது சிறந்தது. அதன் இணையதளத்தில் தற்போதைய பிராசஸர்கள் பற்றிய விவரங்களை அறிந்து தெரிவு செய்யலாம். பிராசஸர்களை பற்றிய மதிப்புரைகளை (review) வாசித்து வாங்குதல் நலம். குறைந்த திறன் கொண்ட பிராசஸர்களை விற்பனை செய்யும் நோக்கத்தோடு பலர் இருப்பர். பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்ட நாளை கவனித்து வாங்க வேண்டும்.

எச்டிடி மற்றும் எஸ்எஸ்டி

எஸ்எஸ்டி என்னும் சாலிட் ஸ்டேட் டிரைவுடன் ஒப்பிடும்போது எச்டிடி பழுதடையும் வாய்ப்பு அதிகம். எஸ்எஸ்டி விலை அதிகமாக இருந்தாலும் வேகம் கூடியவை. உங்கள் தேவைக்கேற்ப சேமிப்பகத்தைத் தெரிவு செய்யலாம். 512 ஜிபி என்பது பயனுள்ளது.

மானிட்டர் மற்றும் போர்ட்

நிறுவன தயாரிப்பான கணினி வாங்கினால் குறைந்தது 21 அங்குல எல்இடி மானிட்டரை தெரிவு செய்யுங்கள். விலை குறைவாகவேண்டும் என்று நினைத்தால் 18 அங்குலமாவது இருக்கும்படி தெரிவு செய்யுங்கள். நல்ல திறனுள்ள யூஎஸ்பி போர்ட், டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ உள்ளிட்டவை உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது நலம்.

You'r reading கேமிங் கம்ப்யூட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை