ஸ்டாலினை சும்மா விடாது ஜெயலலிதாவின் ஆன்மா.. நாங்குநேரியில் முதலமைச்சர் பேச்சு

by எஸ். எம். கணபதி, Oct 19, 2019, 09:26 AM IST

திமுக தலைவர் ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடைகிறது. வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக, காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாங்குநேரி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:

அதிமுக அரசுதான் மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து எங்கள் அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஸ்டாலின் இப்போது மக்கள் குறைகளை கேட்பதற்காக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது இப்படி அவர் திண்ணையில் அமர்ந்து மனு வாங்கியிருந்தால் அவர் நல்ல தலைவர் என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம். அவர்கள் ஆட்சியில் இருந்தால் மக்களை மறந்து விட்டு, குடும்பத்தைப் பற்றியே சிந்திப்பார்கள்.
ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசுகிறார். கருணாநிதியும், ஸ்டாலினும் போட்ட பொய் வழக்கினால்தான் மன உளைச்சல் அடைந்து ஜெயலலிதா மரணமடைந்தார். ஆனால், இன்று மக்களை ஏமாற்ற ஸ்டாலின், அம்மாவுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

இன்று நாம் தாயை இழந்த பிள்ளைகள் போல் தவித்து வருகிறோம். ஜெயலலிதாவின் ஆன்மா, ஸ்டாலினை சும்மா விடாது. ஜெயலலிதாவின் மன உளைச்சலுக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம். அவர்தான் ஜெயலலிதா மீது வழக்கு போடுவதற்கு பொய்யான தகவலை கொடுத்தார். இன்று ஜெயலலிதாவின் ஆன்மா அவரை சும்மா விட்டதா? சிதம்பரத்தை ஜெயலலிதாவின் ஆன்மா பழிவாங்கியுள்ளது. அதனால்தான், அவர் திகார் சிறையில் இருக்கிறார்.

ஜெயலலிதாவை வசை பாடி வருகிற கனிமொழியும் திகார் சிறையில்தான் அடைபட்டு கிடந்தார். எனவே, ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தால் அவரது ஆன்மா சும்மா விடாது. ஸ்டாலின் விஷமப் பிரச்சாரத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.


Leave a reply