முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Jun 14, 2018, 12:33 PM IST

சர்வேதேச அளவில் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி இன்று பலம் வாய்ந்த இந்திய அணியுடன் துவங்கியது. இதற்காக பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஐசிசி சர்வதேச அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளை விளையாடும் வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கியது. இதனையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் விளையாடவுள்ளது. பெங்களுருவில் இன்று காலை 9.30 மணிக்கு போட்டி துவங்கியது.

வரலாற்று சிறப்புமிக்க இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாட வாழ்த்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் மோடி கூறியிருப்பதாவது:- சர்வேதேச அளவில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் மோத தேர்ந்தெடுத்து இருப்பது மகிழ்ச்சி. ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், அணி வீரர்களுக்கும், இந்திய அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் வாழ்த்து கூறினார். மேலும், இது போன்ற விளையாட்டுகளே, இரு நாட்டு மக்களும் நட்புடன் இருக்கவும், நல்லுறவை வலுப்படுத்தும் என்றும் பதிவிட்டு இருந்தார்.

சமீபத்தில் வங்காள தேசத்திற்கு எதிராக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 3 டுவெண்ட்டி-டுவெண்ட்டி போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே வேகத்தில் இன்று தனது முதல் டெஸ்ட் போட்டியை துவங்கியுள்ளது.

கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. தற்காலிக கேப்டனாக ரஹானே செயல்பட்டு வருகிறார். ரஹானே ஒரு பேட்டியில் கூறியது, "டெஸ்ட் போட்டி உள்ளூரில் நடப்பதால் நமக்கு சாதகமாக இருக்கும் என்றும், இருந்தாலும் மிகுந்த கவனமுடன் செயல் படவேண்டிய தருணம் இது" என்று கூறினார்.

More Akkam pakkam News