புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுள் 50 சதவீதப் பெண்கள் மார்பகப் புற்றுநோயால்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மார்பக சுய பரிசோதனை செய்துவந்தால் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய முடியும். ‘மாமோகிராம்’ பரிசோதனை, ஆரம்ப நிலையில் உள்ள நுண்ணிய கட்டியையும் கண்டுபிடித்து விடும். தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொண்ட பிறகு இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
இடுப்புக்கு மேலே துணிகளைக் களைந்துவிட்டுக் கண்ணாடி முன் நிற்கவும். ஒவ்வொரு மார்பையும் தனித்தனியாக உன்னிப்பாகக் கவனிக்கவும். அதன் அளவு, நிறம், தோற்றம் மற்றும் காம்புகளின் அமைப்பைக் கவனிக்க வேண்டும்.
இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, அதேபோல் கவனிக்க வேண்டும்.
இரண்டு கைகளையும் இடுப்பில் அழுத்திக்கொண்டு, தோள்பட்டைகளை முன் தள்ளி கவனிக்க வேண்டும்.
கையின் மூன்று நடு விரல்களில் சோப்பையோ, குளிப்பதற்கு உபயோகப்படுத்தும் வழவழப்பான திரவத்தையோ தடவிக் கொள்ளுங்கள். மார்பின் மேல் அந்த விரல்களால் மிதமாக அழுத்திக்கொண்டு, வட்டம் வட்டமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் விரல்களை நகர்த்தி, மார்புப் பகுதி முழுவதையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
மார்புக்கு மேல் இருக்கும் காரை எலும்பில் இருந்து வயிற்றின் மேற்பகுதி வரையிலும், பக்கவாட்டில் அக்குளிலிருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரையிலும் கட்டி ஏதாவது இருக்கிறதா எனத் தடவிப் பார்க்க வேண்டும்.
இடது மார்பை வலது கையாலும், வலது மார்பை இடது கையாலும் பரிசோதனை செய்ய வேண்டும்.
மார்புக் காம்புகளில் இருந்து கசிவு உண்டா என்று அழுத்திப் பார்க்க வேண்டும்.
பின்னர் படுத்துக்கொண்டு, ஒரு கையை மேலே தூக்கி, மற்ற கையால் மேலே சொன்னபடி மார்பை அழுத்திப் பரிசோதித்துக்கொள்ளவும்.
பெண்கள் விழிப்புடன் இருந்தால் இரண்டு வழிகளில் புற்றுநோயை எதிர்த்துப் போரிடலாம். ஒன்று, நோய் வராமல் தடுக்கும் முறைகளைக் கையாள்வது, மற்றொன்று மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை செய்துகொள்வது.