ரஜினியின் புதியபட சிக்கலை தீர்த்த சூர்யா.. சிவா இயக்கவிருந்த படத்துக்கு புதுபிரச்னை..

by Chandru, Oct 10, 2019, 17:15 PM IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். இப்படத்தையடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அஜீத் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதை கூற அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பேட்டை படத்தை விட விஸ்வாசம் திரைப்படம் அதிக வசூலை பெற்றதாக அப்போது தகவல்கள் வந்ததால் சிவா இயக்கத்தில் நடிக்க ரஜினி விரும்புவ தாக தெரிகிறது.

ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விடம் சிவா செய்து கொண்ட ஒப்பந்தப்படி சூர்யா படத்தை முடித்த பிறகே ரஜினி படத்தை இயக்கும் நிலைக்கு சிவா உள்ளானார். இதுபற்றி ரஜினியிடம் சிவா கூறினார். இதையடுத்து ரஜினியே சூர்யாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். 'இன்னும் சில மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். என் படத்தை முடித்தவுடன் உங்கள் படத்தை சிவா இயக்குவார்' என ரஜினி சூர்யாவிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

ரஜினியே நேரிடையாக கேட்டுக்கொண்டதால் சூர்யா அதை ஏற்றுக்கொண்டு பிரச்னை எழுவதற்கு முன்பே முற்றுப்புள்ளி வைத்தாராம்.

இதையடுத்து தர்பார் படத்திற்கு பிறகு, சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி யுள்ளது.


Leave a reply