ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ஆடை படத்தில் நிர்வாண காட்சிகளில் அமலா பால் நடித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்கு முன் இப்படம் திரைக்கு வந்து வரவேற்பும், எதிர்ப்பும் சம்பாதித்தது. நிர்வாணமாக நடித்ததுபற்றி அமலாபால் கூறும்போது, 'தான் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகளின் படமான போது படக் குழுவினர் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு ஒருசிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். படப்பிடிப்பு நடந்த பகுதியை சுற்றிலும் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பின்பே காட்சிகள் படமாக்கப்பட்டன' என்றார்.
ஆடை படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் முகேஷ் பட் வாங்கி உள்ளார். தமிழில் இப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இந்தி ஆடை படத்தையும் இயக்க உள்ளார். தமிழில் அமலாபால் நடித்து துணிச்சலான காட்சிகளில் நடிப்பதற்கு பொருத்தமான இந்தி நடிகையை படக்குழு தேடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் கங்கனா ரனாவத், அமலாபால் வேடம் ஏற்று இந்தி ஆடை படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. அதை கங்கனா தரப்பு மறுத்திருக்கிறது. ஆடை இந்தி ரீமேக்கில் கங்கனா நடிக்கப்போவதாக நெட்டில் தவறான தகவல் பரபரப்படுகிறது. அதை நம்ப வேண்டாம் என்று கங்கனா தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளனர்.
தற்போது துணிச்சலான நடிகை ஒருவரை கண்டுபிடிக்கும் பணியில் தயாரிப்பாளர்கள் நடிகைகள் வட்டாரத்துக்கு வலை வீசிக்கொண்டிருக்கின்றனர்.