தளபதி விஜயின் 63வது படம் “பிகில்”. அட்லி இயக்கி உள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. இதற்கிடையில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை ஐகோர்ட்டில் அம்ஜத் மீரான் என்ற இயக்குனர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில் பிரேசில் என்ற தலைப்பில் கால்பந்து விளையாட்டு தொடர்பான கதை ஒன்றை எழுதினேன். இந்த கதையை பயன்படுத்தி திரைப்படமும் எடுத்தேன். இந்த நிலையில் என் கதையை பயன்படுத்தி இயக்குனர் அட்லி “பிகில்” படத்தை எடுத்துள்ளார். கதையை ஆராய வக்கீல்கள் குழுவை அமைக்கவேண்டும்.
என் கதையை பயன்படுத்திய அட்லி மற்றும் தயாரிப்பு நிறுவனம் ரூ.10 லட்சம் எனக்கு தர உத்தரவிட வேண்டும். இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் பேனாவினால் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுவை டைப் செய்து தாக்கல் செய்ய வேண்டும். பேனாவினால் எழுதப்பட்ட, திருத்தப்பட்ட மனுவை ஏற்க முடியாது. எனவே புது மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் வக்கீலுக்கு உத்தரவிட்டார்.
அதற்கு மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை வருகிற நவம்பர் 5-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். இதையடுத்து நாளை “பிகில்” திட்டமிட்டபடி வெளியாகும். 27ம் தேதி கொண்டாட வேண்டிய தீபாவளியை 2 நாட்கள் முன்னதாக 25ம் தேதியே கொண்டாடுவதாக விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளீப்படுத்தி உள்ளனர்.