கொரோனா ஊரடங்கு வந்தாலும் வந்தது ஒவ்வொருவரின் வாழ்விலும் இதுவரை இல்லாத மாற்றங்களைச் செய்திருக்கிறது. அடுப்படி பக்கமே கால் வைக்காத பல ஹீரோயின்கள் நான் தான் சமைப்பேன் என்று யூடியூபில் வரும் சமைப்பது எப்படி என்ற வீடியோக்களை பார்த்து விதவிதமாக சமைத்து அதை தங்களது இணைய தள பக்கத்தில் வெளியிட்டனர். பல நடிகர் நடிகைகள் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். லாக்டவுன் தளர்வில் அவர்கள் சிறகை விரித்து டிரெக்கிங், சுவிம்மிங் என்று பறந்தனர். ஆனால் ஒரு நடிகர் மட்டும் கடந்த 150 நாட்களாக வீட்டைவிடு வெளியில் வராமல் வீட்டில் தனக்கு தானே சிறை வைத்ததுபோல் அடைந்து கிடக்கிறார். அவர் வேறுயாருமல்ல தமிழ், மலையாள படங்களில் நடித்திருக்கும் மம்மூட்டிதான். இவரது மகன் துல்கர் சல்மான்.
சமீபத்தில் இணைய தளம் வழியாக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் கொரோனா லாக்டவுன் அனுபவம் பற்றிக் கேட்டபோது மம்மூட்டி பற்றிப் பகிர்ந்தார். கடந்த 150 நாட்களாக எனது தந்தை மம்மூட்டி வீட்டை விட்டு வெளியில் வராமலிருக்கிறார். லாக்டவுன் ஒரு காரணமாக இருந்தாலும் தன்னால் எவ்வளவு நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியும் என்பதை அறிந்துக்கொள்ளவும் அதை ஒரு சவாலாகவும் மேற்கொண்டு இப்படிச் செய்துள்ளார். வெளியில் சென்று வரலாம் என்று அழைத்தபோது கூட அவர் வரவிரும்பவில்லை. என்னால் அதுபோல் வீட்டுக்குள் இருக்க முடியவில்லை. எப்போது வெளியே செல்லலாம் என்று காத்திருக்கிறேன் என்றார்.