கோலிவுட்டில் முன்பு எப்போதும் இல்லாத புது கலாச்சாரம் பரவி வருகிறது. ஒரே ஹீரோவை பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்கின்றனர். இதற்கு பிரபல ஹீரோக்கள் ஒப்புக்கொண்டு நடிக்கின்றனர். இதில் லாபம் இருபக்கமும் உள்ளது. ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால் பிரச்சனை இருக்காது, ஒருவேளை தோல்வி அடைந்தால் அடுத்த படத்தையும் அதே நிறுவனத்துக்கு செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஹீரோவுக்கு உள்ளது. அஜீத் குமார் ஒரே நிறுவனத்துக்கு அடுத்தடுத்து 3 படங்களில் நடித்துத் தருகிறார். அதேபோல் தனுஷ் 3 படங்களில் ஒரே நிறுவனத்துக்கு நடிக்கிறார்.
இதில் ஹீரோக்களுக்குள்ள சிக்கல் என்னவென்றால் அக்ரிமென்ட்படி 3 படங்களில் நடிக்கும் முன்பாக வேறு நிறுவன படத்தில் நடிக்க வேண்டுமென்றால் முன்னரே ஒப்புக் கொண்ட நிறுவனம் மனது வைக்க வேண்டும். நான் படம் தொடங்குகிறேன் அதில்தான் நடிக்க வேண்டுமென்றால் மற்றொரு நிறுவன படத்தை ஏற்பதில் கால்ஷீட் பிரச்சனை ஏற்படும். இப்படித் தான் கிரிக்கெட் வீரர் தோனி படத்தில் நடித்துப் பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் பெரிய பட நிறுவனத்தில் 3 படங்களுக்கு ஒரே நேரத்தில் ஒப்பந்தம் ஆனார். இதனால் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் உள்ளிட்ட 3 பிரமாண்ட படங்களில் நடிக்க முடியாமல் போனது. அப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
ஏற்கனவே 3 படங்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒப்பந்தம் போட்ட தயாரிப்பாளரிடம் சஞ்சய் லீசா பன்சாலி படத்தில் நடிக்க சுஷாந்த் அனுமதி கேட்டபோது அந்நிறுவனம் தாங்கள் படம் தயாரிக்க உள்ளதாகவும் உங்களது கால்ஷீட் எங்களுக்குத் தேவை என்று காரணம் கூறி அனுமதி தர மறுத்துவிட்டது. ஆனால் படம் தொடங்குவது போல் தொடங்கிய பின்னர் அதைக் கைவிட்டது. பன்சாலியின் குறிப்பிட்ட 3 படங்களில் வேறு ஹீரோக்கள் நடித்தனர். அப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அப்படங்களைத் தவறவிட்ட வருத்தம் சுஷாந்த்தின் மன அழுத்தத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழில் ஒரே நிறுவனத்துக்கு 2 அல்லது மூன்று படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யும் பாணி நடைமுறைக்கு வந்துள்ளது. அஜீத் அடுத்தடுத்த தலா இரண்டு அல்லது 3 படங்கள் நடித்துக் கொடுத்தார். ஆரம்பம். வேதாளம், என்னை அறிந்தால் ஆகிய 3 படங்களை ஏ.எம் ரத்னம் பேனருக்கு நடித்துத் தந்தார் அதேபோல் விவேகம், விஸ்வாசம் இரண்டு படங்களைத் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜனுக்கு நடித்துத் தந்தார்.
தற்போது நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து வலிமை படத்தையும் ஸ்ரீதேவி கணவர் போனிகபூருக்கு நடித்துத் தருகிறார் அஜீத்குமார். அதேபோல் தனுஷ் அடுத்தடுத்து இரண்டு தயாரிப்பாளர்களுக்கு தலா 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்த பாணியில் தற்போது சிவகார்த்திகேயன் கேஜே ஆர் ராஜேஷ் நிறுவனத்துக்கு 3 படங்களில் நடித்துக் கொடுக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம்.