கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளனர்.தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கக் குழு கூட்டமைப்பின் சந்திப்பு ஜும் (Zoom) மூலமாக நடைபெற்றது.
இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள்:அவை வருமாறு:
1. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால் தான் ஒரு விநியோகஸ்தரால் அந்த படத்தை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின் ஆதரவு இருந்தால்தான் அந்த படத்தினை விநியோகஸ்தரால் வெளியிட முடியும். முதலில் படகு வேண்டும். அந்த படகை ஓட்டுவதற்குத் துடுப்புள்ள படகோட்டி வேண்டும். படகு பயணிப்பதற்கு தண்ணீர் வேண்டும். இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. இதைப் போலத் தான் நமது திரைப்பட தொழிலும் ஒருவரோடு ஒருவர் சார்ந்தது.
ஒரு தயாரிப்பாளரின் திரைப்படத்தை ஒரு விநியோகஸ்தர் நேரடியாக வாங்கி வெளியிட வேண்டியது என்றாலும், இல்லை ஒரு தயாரிப்பாளர் வெளியிடுவதற்கு உதவிக்கரமாக ஒரு விநியோகஸ்தர் இருப்பது என்றாலும் சரி, திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு தேவை. திரையுலகம் வாழ, திரையரங்குகள் வாழ, திரைப்பட விநியோகஸ்தகள் வாழ, முதலில் பக்க பலமாக, உறுதுணையாக விநியோகஸ்தர்களாகிய நாங்கள் இருக்க முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரின் படத்தை ஒரு விநியோகஸ்தர் வாங்கும் போது அதிர்ஷ்டவசமாக வெற்றி அடைந்துவிட்டால் பரவாயில்லை, ஒருவேளை துரதிஷ்டவசமாக தோல்வி அடைந்துவிட்டால் அந்த தோல்வியைத் தோளிலே தூக்கிச் சுமந்தவர்கள் எண்ணற்ற விநியோகஸ்தர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
இன்றைக்கு வந்திருக்கலாம் O.T.T. தளம், ஆனால் இத்தனை காலமாகப் பல நட்சத்திர நடிகர்களுக்குப் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம் பலம். ஏற்கனவே திரையுலகம் நலிவடைந்து, சிதைந்து விட்டது. பத்தும் பத்தாததற்கு கொரோனா காலத்திலே திரையரங்குகள் மூடப்பட்டுக் கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டிக் கிடக்கின்றது.O.T.T. தளத்திலே நட்சத்திர அந்தஸ்துள்ள படத்தை வாங்குவார்கள், சிபாரிசு செய்பவர்களின் படங்களை வாங்குவார்கள், ஆனால் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா?தயாரிப்பாளர்களே சிந்திக்க வேண்டும், ஆனால் சின்ன படங்களை வாங்கி வெளியிடும் சில விநியோகஸ்தர்களும் இருக்கிறார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம். இந்த O.T.T. என்ற இந்த புதிய தளம் எங்களுடைய திரைப்பட விநியோகஸ்தர் என்ற இனத்தையே அழித்துவிடக் கூடாது என்பதில் நாங்கள்
கவனமாக இருக்க விரும்புகின்றோம்.இன்று வேண்டுமானால் கொரோனாவின் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கலாம். கடவுள் அருளால், காலம் நினைத்தால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும்.
2. தற்போது திரையரங்க நுழைவு கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி 12 சதவிகிதம் வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு (LBT) 8 சதவிகிதம் கேளிக்கை வரி செலுத்துவதால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்குக் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி 8 சதவிகிதம் உள்ளாட்சி வரியினை முற்றிலும் ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பது என் தீர்மானிக்கப்பட்டது.
3. இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் விநியோக உரிமை சம்பந்தமாக வினியோகஸ்தர்களிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு, அவர் தயாரித்த அந்த படத்தினை திரையரங்குகளில் வெளியிடாமலும், விநியோகஸ்தர்கள் செலுத்திய தொகையை திரும்ப அளிக்காமலும், அப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக அப்படத் தினை O.T.T. யில் திரையிடும் தயாரிப்பாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தினை திரும்பப் பெற்றுச் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அளிப்பதற்குச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித், சேலம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் மோகன், திருச்சி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் ரவி, மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் மணிகண்டன் மற்றும் தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.