நடிகை பலாத்கார வழக்கு 16ம் தேதி வரை விசாரணை நிறுத்திவைப்பு..!

by Nishanth, Nov 6, 2020, 13:40 PM IST

பிரபல நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து விசாரணை இன்று வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணையை வரும் 16ம் தேதி வரை நிறுத்தி வைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகை கடந்த 3 வருடங்களுக்கு முன் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் இந்த வழக்கு எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் பின்னர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தன்னுடைய வழக்கை பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம், கடந்த வருடம் ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து உத்தரவிட்டது.

மேலும் விசாரணையை மூடப்பட்ட நீதிமன்றத்தில் வைத்துத் தான் நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இதன்படி கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்ட நடிகையிடமும், சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை குறித்த எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று பத்திரிகைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதால் விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று கோரி போலீஸ் தரப்பு வழக்கறிஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் பாதிக்கப்பட்ட நடிகையும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கேரள நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எதிர்த்தரப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தன்னை மனரீதியாக துன்புறுத்தும் வகையில் ஆபாசமாக கேள்விகளை கேட்டு சிரமப்படுத்தினர் என்றும், அதற்கு விசாரணை நீதிபதி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுக்கள் கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் விசாரணை நீதிமன்றத்தை கடுமையாக குற்றம் சாட்டினார். சாட்சிகளிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பாதிக்கப்பட்ட நடிகையை உயிரோடு கொளுத்துவேன் என்று கூறிய தகவலை நீதிபதிபதிவு செய்யவில்லை என்றும் கூறினார். அரசுத் தரப்பு வழக்கறிஞரே விசாரணை நீதிமன்றத்தை குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையை இன்று வரை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இது தொடர்பாக மீண்டும் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருப்பதால் விசாரணையை நீட்டிக்க வேண்டும் என்று அரசு தரப்பு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நடிகையின் பலாத்கார வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் 16ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை