மீண்டும் அட்லியுடன் இணையும் தளபதி? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..

by Chandru, Dec 6, 2020, 12:00 PM IST

தளபதி நடிகர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து இயக்கினார் அட்லீ. இப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. பிகில் படம் ஓடிக்கொண்டிருந்த நிலையிலேயே அப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கும் எண்ணம் இருப்பதாக அட்லீ தெரிவித்திருந்தார். இதற்கிடையில் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படமாக மாஸ்டர் படத்தில் நடித்தார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதமே இப்படம் வெளியாகவிருந்தது. கொரோனா ஊரடங்கால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.கொரோனா தளர்வில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் தீபாவளி தினத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என்பதால் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் இப்படம் ஒடிடியில் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என தகவல் பரவியது. ஆனால் அதனை பட நிறுவனம் மறுத்ததுடன் தியேட்டரில்தான் முதலில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் அதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. விஜய் நடிக்கும் 65வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது ஆனால் அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதால் அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வேறு ஹீரோ படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். அடுத்து நெல்சன் திலீப்குமார் விஜய் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அதுவும் உறுதியாகவில்லை. தற்போது அட்லியே விஜய்யின் 65வது படத்தை இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான நடிக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் அட்லி அலுவலகத்துக்கு விசிட் செய்திருக்கிறார். இது அடுத்த படத்தை அட்லியே இயக்குவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய்க்கு அட்லி ஏற்கனவே இரண்டு கதைகள் தயாரித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் படத்திற்கு முன்பாக விஜய் படத்தை இயக்குவாரா அல்லது அந்த படத்தை முடித்துவிட்டு இயக்குவாரா என்பது தெரியவில்லை. அதேசமயம் விஜய் அடுத்த பட இயக்குனரை இன்னும் உறுதி செய்யாமல் இருக்கிறார். விஜய்யின் 65வது படத்தை அட்லி இயக்குவார் என்ற தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்