இதுவரை தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலைவிட 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல் பரபரப்பாகவும் வித்தியாசமான களத்துடன் இருக்கப்போவது நிச்சயம். திமுக. அதிமுக, காங்கிரஸ், பா ஜ, கம்பூனிஸ்ட்டுகள், தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் எனப் பல அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்முறை தேர்தல் பிரசாரத்தை முன்னதாகவே தொடங்கிவிட்டதால் சட்டமன்ற தேர்தல் ஏப்ரலுக்கு முன்னதாக மார்ச் மாதமே வரக்கூடும் என்ற வதந்தி அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா போன்றவர்கள் பிரசாரங்கள் சூறாவளி வேகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதி மற்றொரு அரசியல் புயல் வீச காத்துக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இம்மாதம் 31ம் தேதி தனது புதிய கட்சி தொடக்கம் பற்றி அறிவிக்க உள்ளார். ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
தற்போது ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்தாலும் அரசியல் கட்சி தொடங்குவதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. ஏற்கனவே ஒரு குழு ரஜினி சார்பில் தேர்தல் ஆணையம் சென்று அரசியல் கட்சியைப் பதிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மக்கள் சேவை கட்சி என்று கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டதாகவும் ரஜினி அடிக்கடி காட்டும் பாபா முத்திரைக்கு அனுமதி தரப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. அதனை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மறுத்திருந்தார். அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் வரையில் ஊடகங்கள் மூலம் வரும் தகவல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று அறிக்கையில் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் ஏற்கனவே எம்ஜிஆர் ஆட்சி தருவேன் என்று அறிவித்த நிலையில் கமல்ஹாசனும் மேடைக்கு மேடை எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி வருகிறார். எம்ஜிஆரைப் பார்க்காதவர்கள் அமைச்சராக உள்ளனர். நான் எம்ஜிஆர் மடியில் தவழ்ந்தவன். அவரது வாரிசு நான் தான் என்று கூறி வருகிறார். அதற்கு முதல்வரும் அமைச்சர்களும் பதிலடி அளித்து வருகின்றனர். இப்படியொரு பக்கம் மூத்த தலைவர்களின் அரசியல் நடந்துகொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜய்யின் அரசியல் நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்து வருவதாகத் தகவல் பரவி வருகிறது.
கடந்த மாதம் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தேர்தல் அலுவலகத்தில் விஜய்யின் அகில இந்திய விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தார். இது பரபரப்பானது. இதுகுறித்து அறிந்த விஜய், தனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை, அவர் கட்சியில் எனது ரசிகர் மன்றத்தினர் இணையக் கூடாது, கட்சி பணி தேர்தல் பணியிலும் ஈடுபடக் கூடாது என்று அறிவித்தார். இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திர சேகரன் தான் பதிவு செய்த மன்ற பெயரைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டாம் என்று தேர்தல் தலைமை அலுவலகத்துக்குக் கடிதம் எழுதினார்.விஜய் ரசிகர்கள் அவரை அரசியலில் ஈடுபட அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரகசிய ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.
நேற்று விஜய்யின் பனையூர் பண்ணை வீட்டில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்துவிட்டார்கள். ஊடகங்களுக்கு இந்த தகவல் கசிந்ததால் விஜய் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேறக்கவில்லையாம். இதனால் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பியதாக ஒரு தகவல் வந்தது. ஆனால் ரசிகர்களை பனையூர் அலுவலகம் வரவழைத்து நடிகர் விஜய் காணொலி வாயிலாக பேசினார், அப்போது விஜய், நீங்கள் நினைப்பதுபோல் அனைத்தும் விரைவில் நடைபெறும் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தெரிவித்ததாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது. விஜய் இம்முறை நேரடியாக அரசியல் களத்தில் குதிப்பாரா அல்லது யாருக்காவது ஆதரவாக குரல் கொடுப்பாரா என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது மாஸ்டர் படம் திரைக்கு வந்தபிறகு அவரது மாஸ்டர் பிளான் தெரியவரும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.