வாட்ஸ்அப்பில் ஏற்பட்ட கருத்து மோதலால் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரஜினி மக்கள் மன்ற நகர துணைச் செயலாளராக இருப்பவர் தென்றல் முருகன். இவரை கடந்த 18ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தலைமை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பத்திரிகைகளில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான விளம்பரங்கள் வழங்கப்பட்டன.
இதனை விமர்சனம் செய்து தென்றல் முருகன் வாட்ஸ் அப்பில் பதிவு போட்டார். அதன் பிறகு மன்ற நிர்வாகிகள் பதில் பதிவு போட்டனர். இது அவர்கள் இடையே மோதலை ஏற்படுத்தியது. இந்நிலையில்,தென்றல் முருகனை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கடுமையாக தாக்கினர்.இதில் மண்டை உடைந்த தென்றல் முருகன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தனது கணவரை தாக்கிய ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் ரவி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி தென்றல் முருகனின் மனைவி விஜயா அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில்,"இளவரசனின் தூண்டுதலின் பேரில்தான் தனது கணவர் தாக்கப்பட்டதாகவும் இளவரசன் மீதும் கடலூர் மாவட்ட செயலாளர் ரவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்கள் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் வாட்ஸ் ஆப் பதிவுகளை கண்காணிக்குமாறு மாநில நிர்வாகிகளுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் பதிவில் ஏற்பட்ட மோதல் மண்டை உடைப்பு வரை வந்திருப்பது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.