ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 2.0 படத்திற்கு எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாகவும், எமிஜாக்சன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
தீபாவளியன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்த படக்குழு, கிராஃபிக்ஸ் வேலைகள் முடிவடையாத நிலையில், படம் வெளியாகவில்லை. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நாளை ரிலீஸாக உள்ளது.
ஏற்கெனவே படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இதையடுத்து, 2.0 திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு U/A சான்றிதழை பெற்றது.
நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தமிழ் ராக்கர்ஸின் 2000-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உள்ளிட்ட 12,567 இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தடை தொடர்பாக லைகா நிறுவனம் கூறுகையில், நீதிமன்றம் தடை விதித்தாலும் தமிழ் ராக்கர்ஸ் இணையதள முகவரியில் எழுத்துக்களை மாற்றம் செய்து புதிய படங்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.