திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் புத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி இயற்கை மற்றும் யோகா என பல்வேறு பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மூட்டுவலி, ஆஸ்துமா, தைராய்டு, இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட இலவசமாக மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இது மட்டுமின்றி நாள்பட்ட தீராத நோய்களுக்கும் வர்ம சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை கேரளாவில் மட்டுமே பிரசித்தி பெற்றுள்ள நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவதால் தற்போது இங்கு சராசரியாக 600 நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஆனால், போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.