தூத்துக்குடியில் இன்னும் இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று ஆலையின் சிஇஓ ராம்நாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மக்கள் உடல்ரீதியாக அதிகளவில் பாதிக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் வெடித்தது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
தமிழக அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில், நிபந்தனைக்குட்பட்டு ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் ஆலையின் சிஇஓ ராம்நாத் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் விதித்த புதிய விதிமுறைகளை நிறைவேற்ற எங்களுக்கும் இன்னும் நேரம் இருக்கிறது. புதிய நிபந்தனைகளை கடைபிடிப்போம்.
தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். மாசுகட்டுப்பாடு வாரியத்திடம் அதற்கான அனுமதி கேட்டிருக்கிறோம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 15 கிராமங்களுக்கு குடிநீர் வசதி, 10 லட்சம் மரக்கன்றுகள், ஒரு பள்ளி, ஒரு மருத்துவமனை உள்பட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.