சென்னையில் ஸ்மார்ட்போனை திருடி அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் திருடன் ஒருவன் மாட்டிக்கொண்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளையப்பன் அங்கே புல்டோசர் இயக்குநராக பணிபுரிகிறார். அவருடன் மோகன், கார்த்திக், லிங்கேஸ்வரன் ஆகியோரும் சில மாதங்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அறை ஒன்றில் தங்கியுள்ளனர்.
கடந்த வியாழன் (டிசம்பர் 10) அன்று வெள்ளையப்பன் உள்ளிட்ட நான்கு நண்பர்களது மொபைல் போன்களும் அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து திருட்டுப் போய்விட்டன. அதில் லிங்கேஸ்வரனின் மொபைல் மட்டும் லாக் செய்யப்படாமல் இருந்தது. எனவே, நண்பர்கள் வேறொருவரின் போனை வாங்கி லிங்கேஸ்வரனின் போனுக்கு காணொளி அழைப்பு செய்தனர். மாலை 4 மணிக்கு செய்யப்பட்ட அந்த அழைப்பை மறுமுனையில் ஒருவர் எடுத்தார். சிவப்பு நிற டீஷர்ட், காதில் கம்மல் போட்டிருந்த அந்த நபர், கறுப்பு நிற பை ஒன்றையும் மாட்டியிருந்ததை நண்பர்கள் பார்த்து, அதை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்துக் கொண்டனர். பின்னணியில் எழும்பூர் ரயில் நிலையம் தெரிந்ததால், அவர்களது பராமரிப்பு பொறியாளர் பாலமுருகன் என்பவரையும் அழைத்துக்கொண்டு ரயில்நிலையம் சென்றனர்.
மாலை 5 மணிக்கு மறுபடியும் அந்த எண்ணுக்கு அழைத்தனர். அப்போதும் வீடியோ காலை எடுத்து அந்த நபர் பதில் கூறியுள்ளார். அப்போது அவர் ரயிலில் சென்று கொண்டிருந்ததும் அந்த நபருக்கு வீடியோ காலை ஆஃப் செய்வது எப்படி என்று தெரியவில்லை என்பதும் தெரிய வந்தது.
மறுபடியும் இரவு 7 மணிக்கு அழைத்தபோதும் அந்நபர் போனை எடுத்துள்ளார். இம்முறை காமிராவை முகத்தை விட்டு திருப்பி வைத்துக்கொண்டு பேசியுள்ளார். அதில் சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றின் பெயர்ப்பலகை தெரிந்துள்ளது. நண்பர்கள் உடனே அந்தக் கடையின் அருகே சென்றதோடு, அந்தப் பக்கத்திலிருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பி அந்நபரை தேடும்படி கூறியுள்ளனர்.
தியாகராய நகரில் செல்போன் கடையில் அந்த போன்களை விற்க முயன்று கொண்டிருந்தபோது நண்பர்கள் அந்நபரை கண்டுபிடித்தனர். அங்கிருந்த கடைக்காரர்கள் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்து ஆட்டோவில் ஏற்றி சென்னை அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்நபர் கோயம்புத்தூர் பீளமேட்டை சேர்ந்த நல்லிவீரன் (வயது 28) என்று தெரிய வந்தது. போலீஸார் நல்லிவீரனிடமிருந்து ஆறு செல்போன்களை கைப்பற்றினர்.