அமைச்சரவைக் குழுக்களில் அமித்ஷாவுக்கு முக்கியத்துவம்

In Modi govts 8 key cabinet panels, Amit Shah the common factor

by எஸ். எம். கணபதி, Jun 6, 2019, 12:14 PM IST

மத்திய அமைச்சரவை குழுக்கள் அனைத்திலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம் பெற்றுள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது. இந்த முறை மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா இடம் பெற்றுள்ளார். பிரதமருக்கு அடுத்த நிலையில் உள்ள அவர், மத்திய அமைச்சரவைக் குழுக்கள் அனைத்திலும் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம், ஆட்சியில் அவரது முக்கியத்துவம் வெளிப்படுகிறது.


புதிய அரசில் அமைச்சரவைக் குழுக்களை அமைத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதில், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விஷயங்களில் முடிவுகளை எடு்க்கும்.


முக்கிய நியமனங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுவிற்கும் பிரதமர் தலைமை வகிக்கிறார். இதிலும் அமித்ஷா இடம் பெற்றிருக்கிறார். அமித்ஷா தலைமையிலான குடியிருப்பு வசதித் திட்டங்கள் குழுவில் சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, நிதியமமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ரயில்வே அமைச்சர் பியூஸ் ேகாயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங், வீட்டு வசதித் துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர், அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீத்தாராமன், ரவிசங்கர் பிரசாத், நரேந்திரசிங் தோமர், ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற விவகாரக் குழுவுக்கு அமித்ஷாவே தலைமை வகிக்கிறார். இக்குழுவில் நிர்மலா சீத்தாராமன், ராம்விலாஸ் பஸ்வாண், தோமர், ரவிசங்கர்பிரசாத், தவார்சந்த் கெலாட், பிரகாஷ் ஜவடேகர், பிரகலாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவில் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர்கள் அர்ஜூன்ராம் மேவால், முரளீதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இதேபோல், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு பிரதமர் தலைமை வகிக்கிறார். இக்குழுவிலும் அமித்ஷா, கட்கரி, நிர்மலா சீத்தாராமன், பியூஸ்கோயல், பஸ்வான், தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர், ஹர்ஷ்வர்த்தன், அரவிந்த் சாவந்த், ேஜாஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த முறை புதிதாக முதலீடுகள் தொடர்பாக ஒரு குழுவும், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு தொடர்பாக ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிலும் அமித்ஷா இடம் பெற்றிருக்கிறார்.

You'r reading அமைச்சரவைக் குழுக்களில் அமித்ஷாவுக்கு முக்கியத்துவம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை