சர்வதேச காவல்துறை உதவியுடன் நீரவ் மோடியை கைது செய்யவும் சிபிஐ நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், அவர் மெக்கா, கோலாலம்பூரில் புதிய ஷோரூம்களை திறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் வைர வியாபாரியான நீரவ்மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடி அளவிற்கு மோசடி செய்துவிட்டு, இந்தியாவை விட்டு தப்பியோடி இருக்கிறார். அவரதுவீடு மற்றும் நிறுவனங்களில், சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புக்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.
வியாழக்கிழமையன்று ரூ. 5 ஆயிரத்து 100 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளைக் கைப்பற்றிய அதிகாரிகள், வெள்ளிக்கிழமையன்று மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைரத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையே சிபிஐ அமைப்பானது, இண்டர்போல் [சர்வதேச காவல்துறை] உதவியை நாடி உள்ளது. முன்னதாக வங்கி மோசடி தொடர்பாக ஜனவரி 31ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் விடுத்தது. ஆனால் நீரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகள் நாட்டைவிட்டு ஜனவரி மாத துவக்கத்திலேயே வெளிநாட்டுக்குத் தப்பினர்.
நீரவ் மோடி விவகாரம், இந்தியாவில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர் கொஞ்சமும் அலட்டலே இல்லாமல் மெக்கா மற்றும் கோலாலம்பூர் நகரங்களில் புதிய நகைக்கடைகளைத் திறந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
சிபிஐ வழக்குப்பதிவு செய்த பின்னர், மெக்கா மற்றும் கோலாலம்பூரில் நகைக்கடையின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.