அமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்..

Enforcement Directorate arrests P Chidambaram in INX Media case

by எஸ். எம். கணபதி, Oct 16, 2019, 12:25 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சிதம்பரத்தை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டன. இதையடுத்து, அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடு வந்ததற்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமென்று கோரி அமலாக்கத் துறை நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி அஜய்குமார் குகா, திகார் சிறையில் உள்ள சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி அளித்தார். மேலும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி அளித்தார்.

இந்நிலையில், இன்று(அக்.16) காலை அமலாக்கத் துறை துணை இயக்குனர் மகேஷ் சர்மா தலைமையில் 3 அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்றனர். அங்கு அவர்கள் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரத்தை அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுப்புவதா அல்லது திகார் சிறையிலேயே வைத்திருப்பதா என்பதற்கு சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து சிறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

தற்போது, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள 2 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே சிதம்பரம் விடுதலையாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading அமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.. Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை